சீன அதிபரை எதிர்க்கும் தைரியமில்லாதவர் மோடி: ராகுல் விமர்சனம்

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை எதிர்க்க தைரியமில்லாதவர் பிரதமர் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கேரள மாநிலம், திருச்சூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மீனவர்கள் மாநாட்டில், தொண்டர்கள் வழங்கிய அன்பு பரிசுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
கேரள மாநிலம், திருச்சூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மீனவர்கள் மாநாட்டில், தொண்டர்கள் வழங்கிய அன்பு பரிசுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.


சீன அதிபர் ஷி ஜின்பிங்கை எதிர்க்க தைரியமில்லாதவர் பிரதமர் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. மூலமாக அறிவிப்பதற்கு சீனா மறுப்பு தெரிவித்ததையடுத்து, பிரதமர் மோடியை ராகுல் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நல்லுறவை உருவாக்கியுள்ளதாக மோடி கூறுகிறார். ஆனால் இந்திய வீரர்களைக் கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு ஆதரவாக சீனா செயல்படுகிறது.  மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு சீனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. 
ஆனால் இதுகுறித்து நரேந்திர மோடியால் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் பேச முடியவில்லை. ஏனெனில், சீன அதிபரைப் பார்த்து மோடி அச்சம் கொண்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை எதிர்க்கும் தைரியமில்லாதவர் நமது நாட்டின் பிரதமர். ஷி ஜின்பிங் குஜராத்துக்கு வந்தால், அவருடன் இணைந்து மோடி கையசைப்பார். ஷி ஜின்பிங் தில்லிக்கு வந்தால், மோடி அவரை கட்டியணைப்பார். மோடி சீனாவுக்கு சென்றால், ஷி ஜின்பிங் முன்பு தலை வணங்கி நிற்பார். இதுதான் சீனாவுடன் மோடி கொண்டுள்ள உறவு என்று தெரிவித்துள்ளார்
வெளியுறவு கொள்கைகள் வீணாகின..: இதனிடையே, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மறுப்பு தெரிவித்தது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், நம் நாட்டின் 40 வீரர்களை கொன்ற பயங்கரவாதியை மற்றுமொருமுறை தப்பிக்க விட்டுவிட்டனர். இதன்மூலம், பாகிஸ்தானுடன் சீனா வலுவான  உறவை கொண்டுள்ளது என்பதை சீனா நிரூபிக்கிறது. நரேந்திர மோடியின் வெளியுறவு கொள்கைகள் அனைத்தும் பயனற்றுபோய்விட்டன என்று தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர்களின் குரலுக்கே பதிலளிக்கிறார் மோடி..: கேரள மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய ராகுல் காந்தி, திருச்சூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அகில இந்திய மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில், பாஜக ஆட்சியில் தொழிலதிபர்களின் குரலுக்கே பிரதமர் மோடி பதிலளிக்கிறார். அனில் அம்பானி, நீரவ் மோடி உள்ளிட்டோர் என்ன கேட்டாலும் 10 நொடிகளில் அதை மோடி சாத்தியமாக்குவார். அவர்கள் அதற்காக கூக்குரலிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு நிறுவனங்களை வைத்திருப்பேர் தங்களது பிரச்னைகளை எவ்வளவு வேகமாக கூக்குரலிட்டு கூறினாலும், அது பிரதமர் மோடியின் செவிகளை  எட்டாது என்றார். 
மீனவர்களுக்கு தனி அமைச்சகம்..: இதனிடையே, வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு தனி அமைச்சகத்தை உருவாக்குவதாக ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். 
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் பிரதமர் மோடியை போல பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர் அல்ல. ஒன்றை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர்தான் மற்றவர்களிடத்தில் கூறுவேன். மீனவர்களுக்கான தனி அமைச்சகத்தை நிச்சயம் தில்லியில் உருவாக்குவேன் என்றார்.
முன்னதாக, கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் கடந்த ஆண்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி பிரிவு தொண்டரின் இல்லத்துக்கு சென்ற ராகுல் காந்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com