மசூத் அஸார் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை எட்டவே காலஅவகாசம் கோரப்பட்டுள்ளது: சீனா விளக்கம்

மசூத் அஸார் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணும் நோக்கிலேயே, அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தை ஆராய்வதற்குக் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது.
மசூத் அஸார் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை எட்டவே காலஅவகாசம் கோரப்பட்டுள்ளது: சீனா விளக்கம்

மசூத் அஸார் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணும் நோக்கிலேயே, அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தை ஆராய்வதற்குக் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது.
புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும்  தீர்மானத்தை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்தன. இதே கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 10 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட 4-ஆவது தீர்மானம் இதுவாகும்.
இந்தத் தீர்மானத்தின் மீது ஆட்சேபம் ஏதும் இருந்தால், அதைத் தெரிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்கு 10 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இது முடியவிருந்த நிலையில், இத்தீர்மானம் குறித்து ஆராய மேலும் கால அவகாசம் வேண்டும் என்று சீனா கோரியது. இதனால், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
விரிவான ஆய்வு: இந்நிலையில், தீர்மானத்தை ஆராய காலஅவகாசம் கோரிய நடவடிக்கையை நியாயப்படுத்தும் விதமாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு காங், தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எடுக்கப்படும் முடிவுகளின் விளைவுகள், பல நாடுகளில் எதிரொலிக்க உள்ளன. அந்த முடிவை அடிப்படையாக வைத்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளும் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, மசூத் அஸாருக்கு எதிரான தீர்மானத்தின் மீது விரிவான விவாதம் நடத்தும் நோக்கிலும், இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு எட்டும் நோக்கிலுமே கூடுதல் கால அவகாசத்தை சீனா கோரியுள்ளது.
இந்த விவகாரத்தில், நீண்ட காலத்துக்கு உதவும் தீர்வையே அனைத்து நாடுகளும் விரும்புகின்றன. இது தொடர்பாக இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க சீனா தயாராக உள்ளது. குறிப்பிட்ட பயங்கரவாதிகளையும், பயங்கரவாத அமைப்புகளையும் தடை செய்ய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. எனினும், மசூத் அஸாருக்கு எதிரான தீர்மானத்தை விரிவாக ஆராய்வதற்காகவே, கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நல்லுறவுக்கு முக்கியத்துவம்: இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவு குறித்த செய்தியாளர்களின் மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த லு காங், பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இதுவரை 4 முறை சந்தித்துப் பேசியுள்ளனர். குறிப்பாக வூஹான் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்தவும், பல்வேறு விவகாரங்களில் அந்நாட்டுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் சீனா தயாராக உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய தீர்வு காணும் என நம்புகிறோம் என்றார்.
சீனாவுக்கு எச்சரிக்கை: மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க 4-ஆவது முறையாகத் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்துக்கும் சீனா தடை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த விவகாரத்தில், சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்படுத்தி வந்தால், பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள், மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரும். அந்த நிலைமையை சீனா ஏற்படுத்தித் தரக் கூடாது என்று சீனாவை எச்சரித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com