'தேசத்தின் பாதுகாவலர் திருடன்' என்றார் ராகுல்; தற்போது 'நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாவலர்' என்கிறார் பிரதமர்

"நானும் தேசத்தின் பாதுகாவலனே" என்ற ஹேஷ்டேக் கொண்ட தேர்தல் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் தொடங்கியுள்ளார். 
'தேசத்தின் பாதுகாவலர் திருடன்' என்றார் ராகுல்; தற்போது 'நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாவலர்' என்கிறார் பிரதமர்


"நானும் தேசத்தின் பாதுகாவலனே" என்ற ஹேஷ்டேக் கொண்ட தேர்தல் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் தொடங்கியுள்ளார். 

2014 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஆட்சிக்கு வந்தால் மக்களின் பணத்தையும், நம்பிக்கையும் பாதுகாக்கும் பாதுகாவலனாக செயல்படுவேன் என்று நரேந்திர மோடி முன்மொழிந்தார். அதன்பிறகு, அவர் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரும் ஆனார். அதனால், தேசத்தின் பாதுகாவலன் என்ற வாசகம் வெற்றி வாசகமாக தோற்றம் கொண்டது.  

ஆனால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று குறிப்பிட்டார். இதன்மூலம், தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. இதன்மூலம், பாதுகாவலர் என்று பிரதமர் மோடி முன்மொழிந்த சொல் விமரிசனமாக மாறியது.   

இந்நிலையில், அதே பாதுகாவலர் என்ற சொல்லை பயன்படுத்தி பிரதமர் மோடி 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக, அவர் டிவிட்டர் பக்கத்தில் விடியோ இணைப்புடன் இன்று பதிவிடுகையில், 

"உங்களுடைய பாதுகாவலன் உறுதியாக நின்று நாட்டுக்கே சேவையாற்றி வருகிறேன். ஆனால், நான் தனி நபர் அல்ல. ஊழலுக்கு எதிராகவும், சமூகத்தில் நிலவும் தீய செயல்களுக்கு எதிராகவும் போராடும் அனைவருமே பாதுகாவலர் தான். நாட்டின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் அனைவருமே பாதுகாவலர் தான். இன்று, அனைத்து இந்தியர்களும் 'நானும் தேசத்தின் பாதுகாவலனே' என்று சொல்கின்றனர்" என்றார். மேலும், இந்த பதிவின் முடிவில், நானும் தேசத்தின் பாதுகாவலனே என்ற உறுதிமொழியை ஏற்று ஹேஷ்டேக்கை டிவீட் செய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்மூலம், "நானும் தேசத்தின் பாதுகாவலனே" என்கிற ஹேஷ்டேக் தற்போது தேசிய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. 

தேசத்தின் பாதுகாவலன் என்று வாசகத்துக்கு பதிலடி வந்ததை அடுத்து தற்போது நாட்டு மக்கள் அனைவரையுமே பாதுகாவலர் என்ற வட்டத்துக்குள் இழுத்து பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com