ஊழலுக்கு எதிராகப் போராடும் அனைவரும் பாதுகாவலர்களே

"நான் மட்டும் நாட்டைப் பாதுகாக்கவில்லை, ஊழலுக்கு எதிராகப் போராடும் அனைவரும் இந்நாட்டின் பாதுகாவலர்களே' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராகப் போராடும் அனைவரும் பாதுகாவலர்களே

"நான் மட்டும் நாட்டைப் பாதுகாக்கவில்லை, ஊழலுக்கு எதிராகப் போராடும் அனைவரும் இந்நாட்டின் பாதுகாவலர்களே' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், "உங்களின் பாதுகாவலனாகிய நான், உறுதியாகவும், நிலையாகவும் நின்று நாட்டுக்காக உழைத்து வருகிறேன். ஆனால், நான் தனி ஆள் இல்லை. ஊழல், சமூகத் தீமைகளுக்கு எதிராகப் போராடும் அனைவரும் நாட்டின் பாதுகாவலர்களே. நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடும் அனைவரும் பாதுகாவலர்களே. இனி ஒவ்வொரு இந்தியரும் "நானும் பாதுகாவலரே' என்று கூறிக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இது தொடர்பான காணொலி ஒன்றையும் அவர் பதிவிட்டிருந்தார்.
 பிரதமர் மோடியின் பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில், "பிரதமர் மோடிக்கு ஆதரவாக இந்தப் பதிவை வெளியிடுகிறேன்' என்று கூறி பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய வங்கிகளில் கடன்பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குச் சென்ற தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி மற்றும் தொழிலதிபர்கள் அனில் அம்பானி, கெளதம் அதானி ஆகியோர் பிரதமர் மோடியின் பின்னணியில் இருக்கும்வகையில் வடிவமைக்கப்பட்ட புகைப்படத்தின் கீழ், "நானும் பாதுகாவலரே' என்ற வாசகத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.
 அந்தப் பதிவின் முடிவில், "இப்போது நீங்கள் குற்றவாளியாக உணருகிறீர்களா?' என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்ட மற்றொரு சுட்டுரைப் பதிவில், "திருடனாக இருக்கும் ஒரே பாதுகாவலர் பிரதமர் மோடி மட்டுமே. அவர் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடையை அணிந்து வருகிறார். இந்திய வங்கிகளில் கடன்வாங்கிவிட்டு ஏமாற்றியவர்களை அவர் தப்பவிட்டார். மக்கள் பணம் ரூ.52,000 கோடியை சுயவிளம்பரத்துக்காக அவர் பயன்படுத்தினார். மக்களின் பணம் ரூ.2,010 கோடியைச் செலவழித்து 84 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
 "நாட்டின் பாதுகாவலனாக நான் இருக்கிறேன்' என்று பிரதமர் மோடி அடிக்கடி கூறிவரும் நிலையில், தொழிலதிபர்களுக்கு மட்டுமே அவர் ஆதரவாக இருந்து வருவதாகவும், ரஃபேல் விவகாரத்தில், "பாதுகாவலரே திருடனாக மாறிவிட்டார்' என்றும் ராகுல் காந்தி ஏற்கெனவே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com