சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட 54 பேருக்கு பத்ம விருதுகள்: குடியரசுத் தலைவர் கெளரவித்தார்

தமிழகத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சின்னப்பிள்ளை, திருநங்கை நடன கலைஞர் நர்த்தகி நடராஜ், விஞ்ஞானி நம்பி நாராயணன், மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி உள்ளிட்ட 54 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி
சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட 54 பேருக்கு பத்ம விருதுகள்: குடியரசுத் தலைவர் கெளரவித்தார்

தமிழகத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சின்னப்பிள்ளை, திருநங்கை நடன கலைஞர் நர்த்தகி நடராஜ், விஞ்ஞானி நம்பி நாராயணன், மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி உள்ளிட்ட 54 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை கெளரவித்தார்.
 இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 112 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதில் 47 பேருக்கான விருதுகள் கடந்த 11-ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய நபர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஹர்ஷ் வர்தன், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், விஜய் கோயல், பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 பத்ம விபூஷண்: இந்நிகழ்ச்சியில், நாட்டுப்புற பாடகர் தீஜன் பாய், எல்&டி நிறுவனத்தின் தலைவர் அனில் குமார் நாயக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவித்தார்.
 பத்ம பூஷண்: இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், எம்டிஹெச் உணவுப் பொருள் நிறுவனர் மஹசே தரம்பால் குலாதி, மலையேற்ற வீராங்கனை பச்சேந்திரி பால், முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வி.கே. ஷுங்லு ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றனர்.
 பத்ம ஸ்ரீ: வாஜ்பாயால் காலைத் தொட்டு வணங்கப்பட்ட பெருமைக்குரியவரும், மதுரையைச் சேர்ந்த பெண் விவசாயியுமான சின்னப்பிள்ளை, முதல் திருநங்கை நாட்டிய கலைஞரான சென்னையைச் சேர்ந்த நர்த்தகி நட்ராஜ், பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி, வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக தனியொரு நபராக 3 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டியவரும், ஒடிஸாவைச் சேர்ந்த பழங்குடியினருமான தாய்தரி நாயக், தனது 65 ஆண்டுகால வாழ்வில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்ட கர்நாடகத்தின் சாலுமரடா திம்மக்கா உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பத்ம ஸ்ரீ விருது வழங்கினார்.
 ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையான "பஞ்சன்யா'வின் முன்னாள் ஆசிரியர் தேவேந்திர ஸ்வரூப் மறைந்துவிட்ட நிலையில், அவருக்கான பத்ம ஸ்ரீ விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.
 விளையாட்டுத் துறையைச் சேர்ந்த சுனில் சேத்ரி, கெளதம் கம்பீர் உள்ளிட்டோருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
 குடியரசுத் தலைவருக்கு ஆசி வழங்கிய திம்மக்கா
 பத்ம ஸ்ரீ விருதுபெற்ற 106 வயதான சாலுமரடா திம்மக்கா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஆசீர்வாதம் செய்தார்.
 திம்மக்காவுக்கு விருது வழங்கிய ராம்நாத் கோவிந்த், கேமராவை பார்க்குமாறு அவரிடம் கூறினார். அப்போது திம்மக்கா தனது கையை உயர்த்தி ராம்நாத் கோவிந்தின் தலையில் வைத்து அவரை ஆசீர்வதித்தார். ராம்நாத் கோவிந்த் அதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.
 குடியரசுத் தலைவருக்கான கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இதுபோன்ற செயல்களை அனுமதிப்பதில்லை என்றபோதிலும், திம்மக்காவின் ஆத்மார்த்தமான இந்த அன்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. மாறாக, அவரது செயலை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரும் கைகளை தட்டி வரவேற்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திம்மக்காவை விட 33 வயது இளையவராவார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com