தெலங்கானா: இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் சந்திரசேகர் ராவ்

தெலங்கானா: இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் சந்திரசேகர் ராவ்

டிஆர்எஸ் கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ், மக்களவை தேர்தல் பிரசாரத்தை கரீம் நகரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (17-ஆம் தேதி) முதல் தொடங்குகிறார்.

டிஆர்எஸ் கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ், மக்களவை தேர்தல் பிரசாரத்தை கரீம் நகரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (17-ஆம் தேதி) முதல் தொடங்குகிறார்.
 தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி தொடங்கப்பட்ட 2001-ஆம் ஆண்டு முதல் அக்கட்சியின் கோட்டையாக கரீம்நகர் விளங்கி வருகிறது. வழக்கமாக, மக்களவைத் தேர்தலின்போது இங்கிருந்துதான் சந்திரசேகர் ராவ் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார்.
 இம்முறையும், கட்சியின் நட்சத்திர பேச்சாளரான அவர், கரீம்நகர் பொதுக்கூட்டத்தில் இருந்து அவரது பிரசாரத்தை தொடங்குகிறார். இதைதொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியின் சார்பில் நடைபெற உள்ள பேரணி, பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார்.
 சந்திரசேகர் ராவின் மகனும், கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ், தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது குறித்து கட்சியினருடன் கலந்தாலோசனை நடத்தி தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
 மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என யார் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும், தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகளையும் டிஆர்எஸ் கட்சியும், கூட்டணி கட்சியான அகில இந்திய மஜ்லீஸ் கட்சியும் (ஏஐஎம்ஐஎம்) கைப்பற்ற வேண்டும் என டிஆர்எஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
 டிஆர்எஸ் சார்பில் 16 எம்.பி.தொகுதியிலும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைஸி போட்டியிடும் ஹைதராபாத் தொகுதியிலும் சேர்த்து 17 தொகுதியிலும், முழுமையான வெற்றியை பெற்றால் மட்டுமே தெலங்கானாவுக்கு தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும், நிதியுதவிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெற முடியும் என டிஆர்எஸ் கருதுகிறது. எனவே, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளான பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் கடும் போட்டியை ஏற்படுத்த டிஆர்எஸ் தயாராக உள்ளது.
 தெலங்கானாவில் ஏப்ரல் 11ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான, வேட்புமனுத்தாக்கல் வரும் மார்ச் 18 முதல் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com