4.7 கோடி இளைஞர்கள் வேலையிழப்பதற்கு பிரதமர் மோடியே காரணம்: காங்கிரஸ்

நாட்டில் 4.7 கோடி இளைஞர்கள் வேலையிழப்பதற்கு இந்த நாட்டின் காவலரே (பிரதமர் நரேந்திர மோடி) காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
4.7 கோடி இளைஞர்கள் வேலையிழப்பதற்கு பிரதமர் மோடியே காரணம்: காங்கிரஸ்


நாட்டில் 4.7 கோடி இளைஞர்கள் வேலையிழப்பதற்கு இந்த நாட்டின் காவலரே (பிரதமர் நரேந்திர மோடி) காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் ஆகியோர் புதன்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, நாட்டில் கடந்த 1993-94-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக, ஊடகங்களில் வெளியான தகவல்களை அவர்கள் சுட்டிக் காட்டினர். அதைத் தொடர்ந்து சுர்ஜேவாலா கூறியதாவது:
மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகளால், 4.7 கோடி இளைஞர்கள் வேலையிழந்து விட்டனர். அவர்களின் வேலையை பிரதமர் மோடி பறித்துவிட்டார்.
10 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், 4.7 கோடி பேரின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம், நாட்டின் பாதுகாவலரே(பிரதமர் மோடி) காரணம் என்றார் அவர்.
அவரைத் தொடர்ந்து, கபில் சிபல் கூறியதாவது: 
தேசிய அளவிலான கணக்கெடுப்பு அலுவலகத்தின் தகவல்படி, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2 கோடி பேர் வேலையிழந்து விட்டனர். 2011-12-ஆம் ஆண்டில் வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை 30.4 கோடியாக இருந்தது. ஆனால், அது, கடந்த 2017-18-ஆம் ஆண்டில் 28.6 கோடியாகக் குறைந்து விட்டது என்றார் அவர்.
குடும்ப அரசியல்..: காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை குடும்ப ஆட்சி என்று பிரதமர் மோடி கூறுகிறார். அதற்கு முன் அவர் தன்னை முதலில் சுயபரிசோதனை செய்ய வேண்டும். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
உலகிலேயே மிகப் பெரிய குடும்பம் சங் பரிவார் (ஆர்எஸ்எஸ்). அந்த அமைப்பின் ஆதரவின்றி யாரும் முதல்வராகவோ, ஆளுநராகவோ, அமைச்சராகவோ, பிரதமராகவோ பதவியேற்க முடியாது. 
காங்கிரஸ் கட்சியைக் குறை கூறுவதற்கு முன், பிரதமர் மோடி முதலில் தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும். மேலும் விவசாயிகள் பிரச்னை, வேலையின்மை, குடிநீர் தட்டுப்பாடு, கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர் இந்தியர்கள் அனைவரையும் மறந்து விட்டு பிரசாரம் செய்வதிலேயே தீவிரமாக இருக்கிறார். 
மேலும், குடும்ப அரசியல் குறித்து மட்டுமே அவர் கவலைப்படுகிறார் என்றார் கபில் சிபல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com