பிரதமர் அலுவலகத்தை விளம்பர அமைச்சகமாக்கிவிட்டார் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் அலுவலகத்தை, விளம்பர அமைச்சக அலுவலகமாக பிரதமர் நரேந்திர மோடி மாற்றிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
மணிப்பூர் மாநிலம், இம்பாலில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நிர்வாகிகள்.
மணிப்பூர் மாநிலம், இம்பாலில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நிர்வாகிகள்.


பிரதமர் அலுவலகத்தை, விளம்பர அமைச்சக அலுவலகமாக பிரதமர் நரேந்திர மோடி மாற்றிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 
வேலையின்மை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை தொடர்பாகவும் மோடியை அவர் குற்றம்சாட்டினார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, மணிப்பூர் மாநிலம் இம்பாலில், மாணவர்களுடன் ராகுல் காந்தி புதன்கிழமை கலந்துரையாடினார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இந்த இரு நிகழ்வுகளிலும் ராகுல் காந்தி பேசியதாவது:
பாஜக அரசு பொறுப்பேற்றபோது, ஒவ்வோர் ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த ஆண்டில் மட்டுமே ஒரு கோடி வேலைகள் பறிபோயிருக்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 30,000 வேலைகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது அவரது இயலாமையை காட்டுகிறது.
பிரதமர் அலுவலகத்தை விளம்பர அமைச்சக அலுவலகமாக மோடி மாற்றிவிட்டார். 
தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்வதில் அவர் முனைப்பாக இருக்கிறார்.
நரேந்திர மோடி பல்கலைக்கழகத்துக்கு சென்றாரா, இல்லையா என்பது யாருக்குமே தெரியாது. அவரது பட்டச் சான்றிதழும் நமது பார்வைக்கு கிடைக்கப்பெறவில்லை. பிரதமரின் பட்டப்படிப்பு குறித்த கேள்வியுடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை: ஒரு நல்ல காலைப் பொழுதில் எழுந்த மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை செயல்படுத்துவது என்று திடீரென முடிவெடுத்துவிட்டார். அதென்ன நகைச்சுவையா? மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயம் இல்லையா?
மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநில மக்கள் மீது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா திணிக்கப்படும் என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். அவர்கள் உங்கள் கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால், அந்த மசோதா நிறைவேற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சி உங்கள் கலாசாரத்தை காக்கும். அந்த மசோதாவை என்றுமே சட்டமாக விடமாட்டோம். 
நாட்டில் கொள்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது. பிறருடைய கருத்துகளை ஆர்எஸ்எஸ்- பாஜக அணி கண்டுகொள்வதில்லை. ஆனால், அதற்கு மாறாக ஒவ்வொரு மாநிலத்தின் தனித்தன்மை குறித்து காங்கிரஸ் அறிந்து வைத்துள்ளது. அவர்களுக்கான அங்கீகாரத்தை காங்கிரஸ் வழங்கியுள்ளது என்றார் அவர்.
பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹிந்துக்களுக்கு குடியுரிமை வழங்க சட்டத்திருத்தம் கொண்டுவர பாஜக அரசு முயற்சித்தது. இந்நிலையில், தற்போதைய மக்களவை கலைக்கப்படவுள்ள மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த மசோதாவை நிறைவேற்றுவோம் என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com