ரூ.8,100 கோடி வங்கிக் கடன் மோசடி: அல்பேனியாவில் ஸ்டெர்லிங் குழும இயக்குநர் கைது

பல்வேறு வங்களில் ரூ.8,100 கோடி கடன் மோசடி செய்த வழக்கில், ஸ்டெர்லிங் பயோடெக் குழும நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஹிதேஷ் படேல், அல்பேனியாவில் கைது செய்யப்பட்டார்.


பல்வேறு வங்களில் ரூ.8,100 கோடி கடன் மோசடி செய்த வழக்கில், ஸ்டெர்லிங் பயோடெக் குழும நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஹிதேஷ் படேல், அல்பேனியாவில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து தில்லியில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: குஜராத் மாநிலம், வதோதராவில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லிங் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம், ஆந்திர வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து ரூ.8,100 கோடி கடன் வாங்கியது. ஆனால், அந்த தொகையைத் திருப்பிச் செலுத்தாததால், அது வாராக்கடனாக மாறியது. 
மேலும், வங்கியில் இருந்து கடன் பெறுவதற்காக, அந்த நிறுவனம் வரவு-செலவு கணக்கை அதிகரித்துக் காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடிக்கு ஆந்திர வங்கியின் உயரதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிகிறது.  இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் இயக்குநர்கள் சேதன் ஜெயந்திலால் சந்தேஸரா, நிதின் ஜெயந்திலால் சந்தேஸரா, தீப்தி சேதன், ஹிதேஷ் நரேந்திர படேல் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்குத் தப்பியோடி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக, ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம், அதன் இயக்குநர்கள் மற்றும் ஆடிட்டர் ஆகியோருக்கு எதிராக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்நிலையில், ஹிதேஷ் படேலுக்கு எதிராக, அலமாக்கத் துறை கடந்த 11-ஆம் தேதி ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது. இதையடுத்து, அல்பேனியா தலைநகர் திரானாவில் அவரை அந்நாட்டு சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 20-ஆம் தேதி கைது செய்தனர். ஹிதேஷ் படேல், விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்திவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com