ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000: காங்கிரஸ் வாக்குறுதி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், மிகவும் ஏழ்மையில் இருக்கும் 5 கோடி குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருவாயாக ஆண்டுக்கு
Congress poll pledge
Congress poll pledge


மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், மிகவும் ஏழ்மையில் இருக்கும் 5 கோடி குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருவாயாக ஆண்டுக்கு தலா ரூ.72,000 வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். அந்தத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
இந்தியாவில் ஏழ்மையை ஒழிப்பதற்கான இறுதி முயற்சி இது என்று கூறிய ராகுல், மாற்றத்துக்கான காலம் வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்காக, காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுப்பது தொடர்பாக அக்கட்சியின் செயற்குழு தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை கூடி ஆலோசித்தது. 
அதில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங், வீரப்ப மொய்லி, ப.சிதம்பரம், ஷீலா தீட்சித் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, காங்கிரஸின் இந்த குறைந்தபட்ச வருவாய் திட்டம் குறித்து ராகுல் காந்தி தெரிவித்தார். 
அவர் மேலும் கூறியதாவது:
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். நாட்டிலிருந்து ஏழ்மையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான இறுதி நடவடிக்கை தொடங்கிவிட்டது. 
நாங்கள் இந்தியாவிலிருந்து ஏழ்மையை ஒழிப்போம். நாட்டில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் 20 சதவீத குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆண்டுக்கு ரூ.72,000 குறைந்தபட்ச வருவாய் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என காங்கிரஸ் உறுதியளிக்கிறது. இதன்மூலம் 5 கோடி குடும்பங்களும், அதைச் சேர்ந்த 25 கோடி மக்களும் பயனடைவார்கள். அவர்களின் வாழ்வு மேம்படும். 
இந்தத் திட்டம் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து 4-5 மாதங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன், அதை இறுதி செய்வதற்கு முன்பாக பிரபல பொருளாதார நிபுணர்களுடனும் கலந்தாலோசிக்கப்பட்டது. இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் உலகில் வேறெங்கும் இதுவரையில் அமல்படுத்தப்படவில்லை. இத்திட்டம், நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்யும் காங்கிரஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பணக்காரர்களுக்கே உதவி: ஏழைகளுக்கு நிதி ரீதியாக எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டமாக இது இருக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தத் திட்டத்துக்கு தகுதியுடைய மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் கண்டறியப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்குப் பதிலாக, பணக்காரர்களுக்கே நிதி வழங்கி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக பாதிப்பைச் சந்தித்துள்ள ஏழைகளுக்கு காங்கிரஸ் உரிய நீதி வழங்கும். மோடியால் பணக்காரர்களுக்கு உதவ முடியும் என்றால், காங்கிரஸால் ஏழைகளுக்கு உதவ இயலும்.
பிரதமர் மோடி, ஏழைகளுக்கு, பணக்காரர்களுக்கு என இரு இந்தியாவை உருவாக்க முயற்சிக்கிறார். ஆனால் காங்கிரஸ், அதை அனுமதிக்காது. எப்போதும் அனைவருக்கும் ஒரே இந்தியா தான் இருக்கும்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாள்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். ஆட்சிக்கு வந்த உடனேயே அந்த வாக்குறுதியை நிறைவேற்றினோம். 
போதிய நிதி உள்ளது: அதேபோல் ஏழ்மையை ஒழிப்பதன் மூலம் ஏழைகளுக்கு நீதி வழங்கப்படும் என்று இப்போது வாக்குறுதி அளிக்கிறேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதுவும் நிச்சயம் நிறைவேற்றப்படும். அந்தத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும். முதலில் முன்னோட்டமாக அமல்படுத்தப்பட்டு, பிறகு முழுமையாக செயல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். 
அப்போது, இந்தத் திட்டத்துக்கான நிதி எங்கிருந்து கிடைக்கும்? இத்தகைய மிகப்பெரிய திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இந்தியாவில் அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு போதிய நிதி உள்ளது என்று ராகுல் காந்தி கூறினார்.
காங்கிரஸின் இந்த வாக்குறுதி தொடர்பாக ராகுல் காந்தி தனது சுட்டுரையிலும் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை இடைக்கால பட்ஜெட்டின்போது மத்திய அரசு அறிவித்த நிலையில், காங்கிரஸ் இத்தகைய வாக்குறுதியை வழங்கியுள்ளது. 
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள அந்தத் திட்டத்தின் படி, ரூ.6,000 நிதியுதவியானது 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த நிதியுதவியின் மூலம் சுமார் 12 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 

போலியான வாக்குறுதி
காங்கிரஸின் இந்த வாக்குறுதியை போலியானது என விமர்சித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:  கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசே நேரடி மானியத் திட்டத்தை கொண்டு வந்தது. ஏழைகளுக்கான பல்வேறு திட்டங்களில் மானியங்கள் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படுகின்றன. 


காங்கிரஸ் வாக்குறுதியின்படி கணக்கிட்டால், ஏழைகளுக்கு ரூ.3.6 லட்சம் கோடி வழங்கப்படும் எனத் தெரிகிறது. இது, ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் பல்வேறு திட்டங்களின் கீழ் ஏழைகளுக்கு வழங்கப்படும் நிதியை விட குறைவாகும். தற்போது மத்திய அரசு ஏழைகளுக்காக பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.5.34 லட்சம் கோடி வழங்குகிறது என்று  ஜேட்லி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com