விவிபிஏடி கருவி பயன்பாட்டை அதிகரிக்க கோரும் மனு: தேர்தல் ஆணையம் மார்ச் 28-க்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மக்களைவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்கு ஒப்புகைச் சீட்டு (விவிபிஏடி) கருவிகளை அதிகளவில் இணைக்க முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் வரும் மார்ச் 28-ஆம் தேதிக்குள் பதிலளிக்க
விவிபிஏடி கருவி பயன்பாட்டை அதிகரிக்க கோரும் மனு: தேர்தல் ஆணையம் மார்ச் 28-க்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


மக்களைவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்கு ஒப்புகைச் சீட்டு (விவிபிஏடி) கருவிகளை அதிகளவில் இணைக்க முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் வரும் மார்ச் 28-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  (இவிஎம்) மூலம் நடைபெறும் தேர்தலின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த விவிபிஏடி கருவிகளை அதிக அளவில் பொருத்த உத்தரவிடவேண்டும் எனக் கோரி அரசியல் கட்சி தலைவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். அதிலும் குறிப்பாக, ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, விவிபிஏடி கருவிகளை குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்களில் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அப்போதுதான் மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.   
இதே கோரிக்கை தொடர்பாக, மொத்தம் 6 தேசிய கட்சிகள் மற்றும் 15 மாநில கட்சிகள் தலைவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ (மார்க்சிஸ்ட்),சிபிஐ, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக் தள், திமுக  உள்ளிட்ட கட்சிகளும் அடங்கும். 
அரசியல் கட்சி தலைவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கூறியதாவது: 
வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு விவிபிஏடி கருவியை மட்டுமே பொருத்த தேர்தல் ஆணையம் தற்போது முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கை போதாது. எனவே, விவிபிஏடி கருவிகளின் இணைப்பை அதிகரிக்க முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் மார்ச் 28-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் தனது பதிலை தெரிவிக்க வேண்டும் என நீதிபகள் அமர்வு உத்தரவிட்டது.
எந்தவொரு அமைப்பும் ஆலோசனைகளிலிருந்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது. எல்லாவற்றையும் மேம்படுத்துவதற்கு வழிவகை உள்ளது எனக் கூறிய நீதிபதிகள், மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com