ரஃபேல் தீர்ப்பு: சீராய்வு மனுக்கள் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு 4 நாள்கள் அவகாசம்

ரஃபேல் தீர்ப்பு: சீராய்வு மனுக்கள் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு 4 நாள்கள் அவகாசம்

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தொடுக்கப்பட்டுள்ள மனுக்கள் குறித்து மே மாதம் 4ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று


ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தொடுக்கப்பட்டுள்ள மனுக்கள் குறித்து மே மாதம் 4ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் ரகத்தைச் சேர்ந்த 36 விமானங்களை வாங்க இந்திய அரசு ரூ.56,000 கோடி மதிப்பில் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டியும், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
அந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அப்போது அந்த மனுக்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷெளரி, யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், வழக்குரைஞர் வினீத் தாந்தா, ஆம் ஆத்மியை சேர்ந்த வழக்குரைஞர் சஞ்சய் சிங் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக கசிந்த ஆவணங்கள் அடிப்படையில் முன்பு வெளியிட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் சீராய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த 10ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றது. அப்போது மத்திய அரசு தெரிவித்த ஆட்சேபங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே. கௌல், கே.எம். ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது. 
அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி வாதாடுகையில், மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைக்கக்கோரும் கடிதத்தை சுற்றறிக்கையாக மத்திய அரசு ஏற்கெனவே அனுப்பிவிட்டது. ஆதலால் மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.
அப்போது பிரசாந்த் பூஷண் குறுக்கிட்டு,  சீராய்வு மனுக்களைத் தவிர்த்து, நானும், 2 மனுதாரர்களும், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளோம். அந்த மனுக்களுக்கும் சேர்த்து பதில் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார். 
இதைக் கேட்ட வேணுகோபால்,  3 மனுக்களுக்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டார். 
மேலும் அவர் கூறுகையில், சீராய்வு மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் இதுவரை நோட்டீஸ் அனுப்பவில்லை; ஆதலால் மத்திய அரசு தனது பதிலை தெரிவிக்க 4 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
இதில் 4 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை.   இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில்,  இந்த விவகாரத்தில் சனிக்கிழமைக்குள் (மே 4) மத்திய அரசு பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணையை மே மாதம் 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com