அனைத்து தொகுதிகளையும் திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றும்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளையும் திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றும். அதேவேளையில், பாஜக இங்கு ஒரு தொகுதியைக்
ஹெளராவில் புதன்கிழமை திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேரணி நடத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
ஹெளராவில் புதன்கிழமை திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேரணி நடத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.


மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளையும் திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றும். அதேவேளையில், பாஜக இங்கு ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றாது என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார். 
மேற்கு வங்க மாநிலம், ஹெளரா மக்களவைத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் கால்பந்து வீரரான பிராசன் பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஹெளரா மாவட்டத்தில் உள்ள அண்டுல் நகரில் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி பேசியதாவது: 
இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாது;  அக்கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வராது என உறுதியாகக் கூறுகிறேன். மேற்கு வங்க மாநிலத்திலும் அந்தக் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது. ஆனால், மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளையும் திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றும். 
மேற்கு வங்கத்துக்கு பிரசாரத்துக்காக வந்த ஒருவர் (அமித் ஷா), தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) அமல்படுத்தப்படும் என்று கூறினார். முதலில் அவர்கள் ஆட்சிக்கு வரட்டும். பிறகு அதை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கிறது என்று பார்க்கலாம். 
இதுவரையில் 300 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பிகார், பஞ்சாப், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும், தில்லியிலும் பாஜக தோல்வியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது அந்தக் கட்சி மேற்கு வங்கத்தை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.
பாலைவனம் போல வறண்டுபோன மூளை உடைய தொண்டர்களைக் கொண்ட பாஜக போன்ற ஒரு கட்சியால் மேற்கு வங்கத்தில் அவ்வளவு எளிதாகத் தடம் பதித்து விட முடியுமா? மக்களின் மனநிலை என்ன என்பதை பாஜக எப்போதுமே அறிந்துகொண்டதில்லை. 
கடந்த ஆண்டுகளில் 12,000  விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். சுமார் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. ஆனால் பிரதமர் மோடி தற்போது மேற்கு வங்கத்துக்கு வந்து வாக்கு கேட்கிறார். அவருக்கு இந்த மாநிலத்தைப் பற்றி எதுவும் தெரியாது. 
ராமர் கோயிலைப் பொருத்தவரையில், தேர்தல் வரும்போதெல்லாம் பாஜக அந்த விவகாரத்தைக் கையிலெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ராமர் கோயிலின் ஒரு மாதிரியையாவது பாஜகவால் கட்ட முடிந்ததா. பயங்கரவாதத்தை தடுப்பதற்காக பண மதிப்பிழப்பு செய்ததாக மோடி அரசு அறிவித்தது. அதை நானும், எனது கட்சியும் எதிர்த்தோம். 
எதிர்காலத்தில், பணம் இல்லை என்று கூறி அனைத்து வங்கிகளையும் பாஜக தலைமையிலான அரசு மூடும் நாள் வரும் என்று மம்தா பானர்ஜி பேசினார். 
மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலியில் புதன்கிழமை நக்ஸல்கள் நிகழ்த்திய தாக்குதலை குறிப்பிட்டுப் பேசிய மம்தா, மேற்கு வங்கத்தில் புருலியா, பங்குரா, மேற்கு மதினபூர் பகுதிகளில் மாவோயிஸ்டுகளை கட்டுக்குள் கொண்டுவந்து, அங்கு அமைதியை நிலைநாட்டியுள்ளோம். மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் போன்ற நக்ஸல் பாதித்த மாநிலங்களில் முடிந்தால் பாஜக இவ்வாறு அமைதியை நிலைநாட்டட்டும் என்று சவால் விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com