இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு: முன்னாள் காவல் துறை அதிகாரிகள் விடுவிப்பு

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து, முன்னாள் காவல் துறை அதிகாரிகள் டி.ஜி. வன்சரா மற்றும் என்.கே. அமீன் ஆகியோரை விடுவித்து


இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து, முன்னாள் காவல் துறை அதிகாரிகள் டி.ஜி. வன்சரா மற்றும் என்.கே. அமீன் ஆகியோரை விடுவித்து குஜராத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2004-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, அவரை கொலைச் செய்ய முயன்றதாக இஷ்ரத் ஜஹான்(19), ஜாவீத் ஷேக் என்கிற பிரனேஷ் பிள்ளை, அக்பர் அலி ராணா, இஷன் ஜோஹர் ஆகியோரை என்கவுன்ட்டரில் குஜராத் காவல் துறை சுட்டு வீழ்த்தியது.
இந்த என்கவுன்ட்டரை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, இது போலியான என்கவுன்ட்டர் என்று அறிக்கை சமர்ப்பித்தது. அதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.  
விசாரணையின்போது, என்கவுன்ட்டர் தொடர்பாக  ஐபிஎஸ் அதிகாரிகள் பி.பி.பாண்டே, டி.ஜி. வன்சரா மற்றும் என்.கே. அமீன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று குஜராத் அரசிடம் சிபிஐ அனுமதி கோரியது. குற்ற வழக்கில், அரசுப் பணியாளர்களை விசாரிப்பதற்கு மாநில அரசிடம் அனுமதி கோர வேண்டும் என்ற அடிப்படையில் சிபிஐ அனுமதி கோரியது. ஆனால் காவல் துறை அதிகாரிகளை விசாரிக்க குஜராத் அரசு மறுப்பு தெரிவித்தது.
அதையடுத்து தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு டி.ஜி. வன்சரா மற்றும் என்.கே. அமீன் ஆகியோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தனர். 
அப்போது, இஷ்ரத் ஜஹானின் தாயார் தரப்பு வழக்குரைஞர் வாதாடுகையில், ஐபிஎஸ் அதிகாரிகளை விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டிய அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம்தான் உள்ளது. மாநில அரசிடம் இல்லை என்றார். அதையடுத்து ஐபிஎஸ் அதிகாரிகளின் மனுவை நீதிமன்றம் ரத்து செய்தது. 
இந்நிலையில், வழக்கில் விசாரிப்பதற்கு அனுமதி கிடைக்காத நிலையில், தங்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு வன்சரா மற்றும் அமீன் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். அப்போது, சிபிஐ தரப்பு விளக்கத்தை நீதிபதி கோரினார். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. 
அதையடுத்து ஐபிஎஸ் அதிகாரிகளின் விடுதலை மனுவின் இறுதி கட்ட விசாரணை வியாழக்கிழமை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.கே. பாண்டியா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, அரசின் அனுமதி மறுப்பு குறித்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதனால், இந்த வழக்கில் இருந்து ஐபிஎஸ் அதிகாரிகள் டி.ஜி. வன்சரா மற்றும் என்.கே. அமீன் ஆகியோர் விடுவிக்கப்படுகின்றனர் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com