ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 6 முறை துல்லியத் தாக்குதல்: காங்கிரஸ்

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 6 முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது; ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக அதை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்று காங்கிரஸ்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 6 முறை துல்லியத் தாக்குதல்: காங்கிரஸ்


முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 6 முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது; ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக அதை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
தில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா, இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பட்டல் செக்டார்(ஜூன் 19, 2008), சாரதா செக்டார் (ஆகஸ்ட்30 - செப்டம்பர் 1, 2011), சவன் பத்ரா செக்போஸ்ட் (ஜனவரி 6, 2013), நாஜாபிர் செக்டார் (ஜூலை 27-28, 2013), நீலம் பள்ளத்தாக்கு (ஆகஸ்ட் 6, 2013),  2013-ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஒரு தாக்குதல் என மொத்தம் 6 முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுமட்டுமன்றி, வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசின் ஆட்சிக் காலத்திலும், நீலம் ஆற்றின் குறுக்கே நடாலா என்கிளேவ் என்ற இடத்திலும் (ஜனவரி 21, 2000), பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரோ செக்டாரிலும் (செப்டம்பர் 18, 2003) இரு முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், இந்த தாக்குதல்கள் குறித்து மன்மோகன் சிங்கோ அல்லது வாஜ்பாயோ ஒருமுறை கூட பேசியதில்லை. 
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மன்மோகன் சிங் அரசு தவறிவிட்டது என்று ஜேட்லி குற்றம்சாட்டுகிறார். ராணுவ நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்பது மரபு. ஆனால், அனைத்து மரபுகளையும் மத்திய அரசு தகர்த்துவிட்டது.
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகள்தான் காரணம் என்று பாஜக தலைவர்கள் பெருமிதத்துடன் கூறுகிறார்கள்.
இந்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளால்தான் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. இதற்கு தனிப்பட்ட ஓர் அரசு மட்டுமே உரிமை கோரக் கூடாது. ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மசூத் அஸாரை, மத்தியில் ஆட்சியில் இருந்த அப்போதைய பாஜக அரசுதான் விடுதலை செய்தது. காங்கிரஸின் தொடர் முயற்சிகளால் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சயீது, ஜகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்டோரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்தது.
மசூத் அஸாருக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்திருப்பது ராஜ்ஜிய ரீதியில் கிடைத்த வெற்றி என்று பாகிஸ்தான் கூறுவது கண்டனத்துக்குரியது. 
புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், காஷ்மீரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் ஆகியவற்றுக்கும், மசூத் அஸாருக்கும் தொடர்பில்லை என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் கூறியது. அதன் பிறகுதான், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்தது. புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மசூத் அஸாருக்கு நேரடித் தொடர்பு உள்ளது. இதை அவரும் ஒப்புக்கொண்டார். எனவே, பாகிஸ்தானின் கருத்துக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்ததை கொண்டாடினால் அரசியல் ரீதியில் சரிவு ஏற்படும் என அஞ்சி எதிர்க்கட்சிகள் அதைக் கொண்டாடத் தயங்குகின்றன என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள்.
மசூத் அஸார் பயங்கரவாதிதான். அவரது அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான். அதே நேரம், அவரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்ததற்கான பெருமை முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளுக்கும் சேர வேண்டும் என்றார் ராஜீவ் சுக்லா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com