பாஜக இல்லாத கூட்டணியே மத்தியில் ஆட்சியமைக்கும்: அபிஷேக் மனு சிங்வி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்; பாஜக இல்லாத கூட்டணியே மத்தியில் ஆட்சியமைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு
பாஜக இல்லாத கூட்டணியே மத்தியில் ஆட்சியமைக்கும்: அபிஷேக் மனு சிங்வி


மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்; பாஜக இல்லாத கூட்டணியே மத்தியில் ஆட்சியமைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு அபிஷேக் சிங்வி அளித்த பேட்டியில் கூறியதாவது:
மக்களவைத் தேர்தல் முடிவில் தொங்கு நாடாளுமன்றம் அமைய வாய்ப்புள்ளதா என்று கேட்கிறீர்கள். எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நிச்சயம் பாஜக அல்லாத கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும். மக்களவைத் தேர்தல் முடிவு வரும் 23-ஆம் தேதி வெளியான பின்பு, மத்தியில் பாஜக இல்லாத கூட்டணி ஆட்சியமைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஒவ்வொரு கட்சியும் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது குறித்து மட்டுமே தற்போது பேச வேண்டும் என்றார்.
காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடைய கட்சியாக வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு, எங்கள் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று நான் இப்போது கூறினால் அது மிகைப்படுத்தி கூறுவதாக தோன்றும். ஆனால் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புண்டு என கூறலாம் என்றார். 
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை ஒப்பிடும்போது, இந்த முறை பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். கடந்த தேர்தலின்போது, 11 மாநிலங்களில் 90 சதவீதம் மோடி அலை வீசியது. ஆனால் இப்போது அது 50 சதவீதம் கூட இல்லை. மத்தியில் பாஜக ஆட்சியமைக்க சுமார் 100-120 இடங்கள் பற்றாக்குறை ஏற்படும்.
தமிழகம், கர்நாடகம், தெலங்கானா, கேரளம், ஆந்திரம் ஆகிய தென்மாநிலங்களில் பாஜக ஓரிரு இடங்களில் வெற்றி பெறுவதே அரிது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியதால், வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக ஆதரவை இழந்து விட்டது. ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தில் பெறும் ஒரு சில இடங்களை கொண்டு 100-120 இடங்கள் பற்றாக்குறையை சரிசெய்ய இயலாது என்றார்.
தேர்தல் முடிவுக்கு பின்னர், சமாஜவாதி, பகுஜன்சமாஜ், திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, இந்த கட்சிகள் அனைத்தும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. அக்கட்சிகள் பாஜகவை விட காங்கிரஸுடன்தான் நல்லுறவில் உள்ளன என்றார்.
தேசியவாதம், தேசப்பற்று ஆகிய வார்த்தைகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாஜக வேறு அர்த்தம் காட்டியுள்ளது. பாஜகவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் தேசதுரோகிகள் என குற்றம்சாட்டப்படுகிறார்கள். இதுதான் அவர்கள் கற்பிக்கும் தேசியவாதம் என்று அபிஷேக் மனு சிங்வி குற்றம்சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com