மோடி, அமித் ஷா மீது புகார்: உச்சநீதிமன்றம் கெடு

தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி
மோடி, அமித் ஷா மீது புகார்: உச்சநீதிமன்றம் கெடு

தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி அளித்துள்ள 9 புகார்கள் மீது வரும் 6-ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பி. சுஷ்மிதா தேவ் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர், மக்களவைத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி முதல் அமலில் உள்ளன. இருப்பினும், பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பதற்றமான பகுதிகள் மற்றும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் தொடர்ந்து மீறி வருகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் சார்பில் ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் அதன்மீது தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், காங்கிரஸ் கட்சியின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில், தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மோடியும், அமித் ஷாவும் மீறியதாக காங்கிரஸ் கட்சியால் 11 புகார்கள் அளிக்கப்பட்டதாகவும், அதில் 2 புகார்கள் மீது ஏற்கெனவே முடிவெடுத்து அறிவித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆட்சேபம் தெரிவித்தார். அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி 11 புகார்களை அளித்துள்ளது. அதில் 2 புகார்கள் மீது மட்டுமே தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. அதுவும் புகார் அளித்து ஐந்தரை வாரங்கள் கழித்து இந்த முடிவை எடுத்துள்ளது.  
முதல் புகார் மனு அளித்து, 40 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த விவகாரத்தில்  விரைந்து முடிவு எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும். எஞ்சிய 9 புகார்கள் மீது வெள்ளிக்கிழமை முடிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரும் 6ஆம் தேதி மீண்டும் விசாரணை நடத்தும். அதற்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் எஞ்சிய 9 புகார்கள் மீது தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதைக்கேட்ட தேர்தல் ஆணைய வழக்குரைஞர், மேலும் ஒன்றிரண்டு நாள்கள் தேர்தல் ஆணையத்துக்கு  கூடுதலாக அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கவில்லை. தேர்தல் ஆணையம் முடிவெடுக்க 6ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதிகள் மீண்டும் சுட்டிக்காட்டினர்.
முன்னதாக, லத்தூர், வார்தா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தபோது தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியால் அளிக்கப்பட்ட 2 புகார்கள் மீது தேர்தல் ஆணையம் தனது முடிவை அண்மையில் அறிவித்தது. அப்போது தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் மோடி மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com