மோடியைப் போல மோசமான அரசியல் தலைவரை பார்த்ததில்லை: மம்தா பானர்ஜி

பிரதமர் நரேந்திர மோடியைப் போல மோசமான அரசியல் தலைவரை தேசம் இதுவரை கண்டதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மோடியைப் போல மோசமான அரசியல் தலைவரை பார்த்ததில்லை: மம்தா பானர்ஜி


பிரதமர் நரேந்திர மோடியைப் போல மோசமான அரசியல் தலைவரை தேசம் இதுவரை கண்டதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் பராக்பூர் பகுதியில் வியாழக்கிழமை திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
கடந்த 1857-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சிப்பாய் புரட்சி ஏற்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இது மிகவும் முக்கிய நிகழ்வாகும். இதேபோன்று, இப்போதைய மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும் புரட்சியை நடத்தி வருகிறது. இப்போது நாம் கூடியுள்ள பராக்பூர் பகுதியில்தான் முதலில் சிப்பாய் புரட்சி வெடித்தது. வாக்காளர்கள் இதனை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.
பாஜக ஆட்சியில் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளால் ஜனநாயகம் என்பது கேள்விக் குறியாகி வருகிறது. மேற்கு வங்கத்தில் எனது தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு, பாஜகவின் வன்முறைகளை அனுமதிக்கவில்லை. எனவேதான் அவர்கள் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்திவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள். மோடிக்கு முடிவு கட்டுவதன் மூலம் நாம் தேசத்தைப் பாதுகாக்க வேண்டும்.
காந்திஜி, நேதாஜி, அம்பேத்கர் உள்ளிட்ட சிறந்த தலைவர்கள் நமது தேசத்தில் தோன்றி பெருமை சேர்த்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடியைப் போன்ற ஒரு மோசமான அரசியல் தலைவரை இந்த நாடு இதுவரை கண்டதில்லை. திரைப்படங்களில் வரும் கொடூரமான கதாபாத்திரம் போல மோடி செயல்பட்டு வருகிறார். ஜனநாயகமான, மக்கள் நலன் சார்ந்த அரசுதான் நமக்குத் தேவை. பாஜகவின் ஜனநாயக விரோத அரசு நமக்குத் தேவையில்லை.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவ தயாராக இருக்கிறார்கள் என்று மோடி பேசியுள்ளார். தேர்தலுக்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதற்கு இது உதாரணம். அவர் கூறுவது உண்மையாக இருந்தால், அந்த 40 எம்எல்ஏக்களில் ஒரு சிலரது பெயரையாவது அவர் கூறட்டும். திரிணமூல் காங்கிரஸ் என்பது நன்கு வேரூன்றி வளர்ந்துவிட்ட மரம். அதனை வீழ்த்த பாஜகவால் முடியாது. அவர்களது வெற்றுமிரட்டல் பேச்சுகளைக் கேட்டு நான் பயந்துவிட மாட்டேன் என்றார் மம்தா பானர்ஜி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com