வெப்பநிலை அதிகரிப்பதால் ராகுல் வெளிநாடு செல்கிறார்: அமித் ஷா கிண்டல்

நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு செல்கிறார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கிண்டலாகத் தெரிவித்தார்.
வெப்பநிலை அதிகரிப்பதால் ராகுல் வெளிநாடு செல்கிறார்: அமித் ஷா கிண்டல்


நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு செல்கிறார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கிண்டலாகத் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி ஓய்வின்றி நாட்டுக்காக உழைக்கிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவ்வப்போது அவரது தாயார் சோனியா காந்திக்குக் கூட தெரியாமல் வெளிநாட்டுக்குச் செல்கிறார். பிரதமர் மோடி கடந்த 20 ஆண்டுகளில் ஒரு நாள்கூட விடுமுறை எடுத்ததில்லை.  பயங்கரவாதிகளுக்கு மோடி அரசு உரிய பதிலடி கொடுத்து வருகிறது. துப்பாக்கி குண்டு மழை பொழிந்தால் நாம் வெடிகுண்டுகளை பயன்படுத்தி பதிலடி கொடுத்து வருகிறோம்.
ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க மோடி பல்வேறு முயற்சிகளை எடுத்தார். சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதம் வளர்ந்து வருவதை உலக நாடுகள் அனைத்தும் நம்புகிறது. இது மோடியின் முயற்சியால்தான் சாத்தியமானது. ஜம்மு-காஷ்மீருக்கு தனி பிரதமர் தேவை என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா கோரிக்கை விடுத்தார். இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரிக்க
அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.  மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்பார் என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அமித் ஷா.
மத்தியப் பிரதேசத்தில் 6 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 29ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. எஞ்சியுள்ள 23 தொகுதிகளுக்கு மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com