தில்லி: பாஜகவில் இணைந்தார் ஆம் ஆத்மி எம்எல்ஏ அனில் பாஜ்பாய்

தில்லியில் காந்தி நகர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ-வான அனில் பாஜ்பாய், அக்கட்சியிலிருந்து வெள்ளிக்கிழமை விலகி பாஜகவில் இணைந்தார். 
தில்லியில் வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்த தில்லி காந்தி நகர் சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் அருண் பாஜ்பாய்
தில்லியில் வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்த தில்லி காந்தி நகர் சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் அருண் பாஜ்பாய்


தில்லியில் காந்தி நகர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ-வான அனில் பாஜ்பாய், அக்கட்சியிலிருந்து வெள்ளிக்கிழமை விலகி பாஜகவில் இணைந்தார். 
குதிரை பேரத்தின் மூலம் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் சுட்டுரையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விட்ட சில மணிநேரத்தில் அனில் பாஜ்பாய் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவில் இணைவதற்கு தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் 7 பேருக்கு தலா ரூ.10 கோடி கொடுக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா புதன்கிழமை குற்றம் சாட்டியிருந்தார். 
அதற்கு பதிலளிக்கும் வகையில், 7 பேரல்ல; ஆம் ஆத்மியிலிருந்து விலகும் மனநிலையில் இருக்கும் 14 எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று மத்திய இணை அமைச்சரும், பாஜக தலைவருமான விஜய் கோயல் வியாழக்கிழமை கூறியிருந்தார். 
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் காந்தி நகர் எம்எல்ஏ அனில் பாஜ்பாய் பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் விஜய் கோயல், பாஜகவின் தில்லி பொறுப்பாளர் ஷியாம் ஜாஜூ ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில், காந்தி நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட  3 வார்டுகளைச் சேர்ந்த ஆம் ஆத்மி கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்தனர்.
எதற்காக: இந்நிகழ்வில் அனில் பாஜ்பாய் எம்எல்ஏ பேசுகையில், ஆம் ஆத்மி கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தேன். ஆனால், அங்கு உள்கட்சி ஜனநாயகம் இல்லை. எம்எல்ஏக்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை. ஆம் ஆத்மி கட்சி எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ அதிலிருந்து விலகிச் செல்கிறது. பிரதமர் மோடியின் கொள்கைகளால் கவரப்பட்டே  பாஜகவில் சேர்ந்தேன். பணம் பெற்றுக் கொண்டு சேரவில்லை என்றார். 
மத்திய அமைச்சர் விஜய் கோயல் பேசுகையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு பாஜக பணம் கொடுக்க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டுகிறது. அப்படியென்றால், பாஜகவில் இருந்து பிரிந்து சென்ற நிவாஸ் கோயல், குஹன் சிங் உள்ளிட்டோரை ஆம் ஆத்மி பணம் கொடுத்துதான் தங்கள் கட்சிக்கு இழுத்துக்கொண்டதா? உண்மையில், ஆம் ஆத்மி கட்சித் தலைமையின் செயல்பாடுகளாலும், காங்கிரஸுடன் கூட்டணி வைக்க அக்கட்சி காட்டிய முனைப்பாலும் பல ஆம் ஆத்மி தலைவர்கள் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் மிக விரைவில் பாஜகவில் சேர்வார்கள் என்றார் அவர். 
கேஜரிவால் சவால்: முன்னதாக, பிரதமர் மோடிக்கு சவால் விட்டு கேஜரிவால் தனது சுட்டுரையில் வெள்ளிக்கிழமை பதிவிட்டிருந்ததாவது: 
பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை குதிரை பேரத்தின் மூலம் கவிழ்க்கப் பார்க்கிறீர்களா மோடி? இதுதான் ஜனநாயகம் தொடர்பான உங்களின் வரைவிலக்கணமா? குதிரை பேரத்துக்கான பணம் உங்களுக்கு எங்கிருந்து வருகிறது? முன்பும் கூட எங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்து தோல்வியுற்றீர்கள். 
குதிரை பேரத்தின் மூலம் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை இலகுவாக விலைக்கு வாங்கலாம் என கனவு காணாதீர்கள் என்று கேஜரிவால் பதிவிட்டிருந்தார். 
ஆனால், அவர் பதிவிட்ட சில மணிநேரத்தில் அனில் பாஜ்பாய் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுக்கு வேட்பாளர்களின் மீது நம்பிக்கை இல்லை: ஆம் ஆத்மி
பாஜகவுக்கு தனது மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் மீது நம்பிக்கை இல்லாததாலேயே அக்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது. 
இது தொடர்பாக அக்கட்சியின் தில்லி பொறுப்பாளர் கோபால் ராய் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: 
எந்தவொரு எம்எல்ஏவும் தான் பணம் பெற்றுக் கொண்டு கட்சி மாறினேன் என ஒப்புக் கொள்ள மாட்டார். தாம் விலகிச் செல்லும் கட்சியைத்தான் தவறு சொல்வார்கள். அனில் பாஜ்பாய் விவகாரத்திலும் அதுதான் நடந்துள்ளது. 
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி மேற்கொண்ட முயற்சிகளால் அவர் ஆம் ஆத்மியை விட்டு விலகியுள்ளார் என்கின்றனர். ஆனால், அனில் பாஜ்பாய் காங்கிரஸ் கட்சியில் இருந்துதான் ஆம் ஆத்மியில் சேர்ந்தவர் என்பதை மறக்கக் கூடாது. பாஜகவுக்கு தனது மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லை. அதனால்தான் இப்படியான குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com