பிகாரில் 11 சிறுமிகளை கொன்றார் காப்பக உரிமையாளர்: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

பிகார் பாலியல் வன்கொடுமை வழக்கில், காப்பகத்தில் 11 சிறுமிகளை, காப்பக உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
பிகாரில் 11 சிறுமிகளை கொன்றார் காப்பக உரிமையாளர்: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தகவல்


பிகார் பாலியல் வன்கொடுமை வழக்கில், காப்பகத்தில் 11 சிறுமிகளை, காப்பக உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் சிறார் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் கடந்த ஆண்டு தெரியவந்தது. 
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, உச்சநீதிமன்றத்தில் தனது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:
முசாஃபர்பூரில் உள்ள காப்பகத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்படி, காப்பகத்தில் தங்கியிருந்த 11 சிறுமிகளை காப்பகத்தின் உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குட்டு படேல் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் அளித்த தகவலின்படி, முசாஃபர்பூரில் உள்ள மயானத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோண்டப்பட்டது. அங்கிருந்து சில எலும்புக் கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிகார் காப்பக வழக்கை சிபிஐ சரியாக விசாரிக்கவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, சிபிஐ சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால், வழக்கை சிபிஐ துரிதமாக விசாரித்து வருவதாகவும், உடனடியாக பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றும் கூறினார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை நீதிபதிகள், வரும் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com