ராகுல் காந்தி இந்தியாவில் பிறந்ததற்கு நான் சாட்சி..!: கேரள செவிலியர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவர் இந்தியாவில் பிறந்ததற்கு நான் சாட்சி என்றும், அவரை முதலில் தூக்கியவர்களில் நானும் ஒருவர் என்று
ராகுல் காந்தி இந்தியாவில் பிறந்ததற்கு நான் சாட்சி..!: கேரள செவிலியர்


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவர் இந்தியாவில் பிறந்ததற்கு நான் சாட்சி என்றும், அவரை முதலில் தூக்கியவர்களில் நானும் ஒருவர் என்றும் கேரளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் வி.ராஜம்மா (72) தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை வைத்திருப்பதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் அளித்ததையடுத்து, இதுகுறித்து விளக்கமளிக்குமாறு ராகுலுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. அதைத்தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடுவதற்கு ராகுலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், அவர் இந்தியாவில் பிறந்ததற்கு நான் சாட்சி என்று வி.ராஜம்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிடிஐ செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
1970-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி, தில்லியில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் ராகுல் காந்தி பிறந்தார். நான் அப்போது அந்த மருத்துவமனையில் செவிலியர் பயிற்சியில் இருந்தேன். சோனியா காந்திக்கு குழந்தை பிறந்ததும், குழந்தையை தூக்கிய சிலரில் நானும் ஒருவர். குழந்தை மிகவும் அழகாக இருந்தது. நாட்டின் பிரதமர் இந்திரா காந்தியின் பேரக் குழந்தையை நாம் தூக்கியுள்ளோம் என்று நாங்கள் அனைவரும் அப்போது  மிக்க மகிழ்ச்சியடைந்தோம்.
 ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தியும், சித்தப்பா சஞ்சய் காந்தியும் பிரசவ அறைக்கு வெளியே இருந்தனர். அந்த நாளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. இதுகுறித்து என் குடும்பத்தினரிடமும்  பல முறை கூறியுள்ளேன்.
இப்போது அவரின் குடியுரிமை குறித்து அனைவரும் கேள்வியெழுப்புவது வருத்தமாக உள்ளது. ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து யாரும் கேள்வி எழுப்பக் கூடாது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுப்பிரமணியன் சுவாமி கூறுகிறார்.  நான் கையில் எடுத்து தூக்கிய குழந்தை, இப்போது என் மாநிலத்தில் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்த முறை அவர் வயநாடு வரும்போது, நிச்சயம் அவரை சந்திப்பேன் என்று நம்பிக்கை உள்ளது என்றார் ராஜம்மா. உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் மட்டுமன்றி, கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் ராகுல் போட்டியிடுகிறார். வயநாட்டில் இதுவரை இல்லாத அளவு, கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில்  80. 31 சதவீத வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com