பாதுகாப்புப் படையினரை அவமதித்துவிட்டார் மோடி: ராகுல் காந்தி தாக்கு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் துல்லியத் தாக்குதலை "விடியோ கேம்' என கூறியதன் மூலம் பாதுகாப்புப் படையினரை பிரதமர் நரேந்திர மோடி அவமதித்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினரை அவமதித்துவிட்டார் மோடி: ராகுல் காந்தி தாக்கு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் துல்லியத் தாக்குதலை "விடியோ கேம்' என கூறியதன் மூலம் பாதுகாப்புப் படையினரை பிரதமர் நரேந்திர மோடி அவமதித்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
 இதுகுறித்து தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது: முப்படையும் பிரதமர் மோடியின் சொத்து அல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் துல்லியத் தாக்குதல் நடவடிக்கையை "விடியோ கேம்' என பிரதமர் கூறியுள்ளார். இவ்வாறு கூறி அவர் காங்கிரûஸ அவமதிக்கவில்லை; பாதுகாப்புப் படையினரை அவமதித்துள்ளார்.
 பாதுகாப்புப் படையினர் கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு போர்களில் வெற்றி பெற்றுள்ளனர். துல்லியத் தாக்குதல் நடத்துவது பாதுகாப்புப் படையினரின் பணிகளில் ஒன்றாகும். இந்த விவகாரத்தில் நரேந்திர மோடி செய்வதற்கு ஒன்றுமில்லை.
 மசூத் அஸார் விவகாரம்: பயங்கரவாதத்தை கட்டுப்படுத்திவிட்டதாக மோடி கூறுகிறார். பயங்கரவாதி மசூத் அஸாரை 1999-இல் காங்கிரஸ் கட்சியா பாகிஸ்தானுக்கு அனுப்பியது; பயங்கரவாதத்துடன் எந்த அரசு சமரசம் செய்து கொண்டது; காங்கிரஸ் அரசு ஒரு போதும் மசூத் அஸாரை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை. பாஜகதான் பயங்கரவாதத்துடன் சமரசம் செய்து கொண்டது.
 கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கும், நலிவுற்ற விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் என்ன நன்மை செய்தார் என்பதை நரேந்திர மோடி விளக்க வேண்டும்.
 பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையை காங்கிரஸ் அரசியலாக்கவில்லை. ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளை தனது சொத்து என நரேந்திர மோடி நினைக்கிறார். இது இந்திய ராணுவம். எவருடைய தனிச் சொத்தும் அல்ல. அப்படிப்பட்ட ராணுவத்தை பிரதமர் மதித்திருக்க வேண்டுமே தவிர, அவமதித்திருக்கக் கூடாது.
 ரஃபேல் விவகாரம்: வேலையின்மை, ஊழல் தொடர்பாக அம்பானியின் இல்லத்தைத் தவிர எங்கு வேண்டுமானாலும் பிரதமருடன் விவாதம் நடத்தத் தயாராக உள்ளேன். ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில், பிரான்ஸ் அரசும் பிரதமர் அலுவலகமும் நேரிடையாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 இதன் பொருள் என்ன? ஒரே நேரத்தில் பிரதமர் அலுவலகம் ஏன் இரு முனைகளிலும் வெவ்வேறு வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; அது பணப் பரிமாற்றத்துக்காகத்தான் இருக்க வேண்டும்.
 பிரான்ஸ் அரசிடமிருந்து அனில் அம்பானி ரூ.1,000 கோடி வரி தள்ளுபடியை எப்படி பெற்றார்? தன்னை "காவலாளி' எனக் கூறிக் கொள்பவர், ரஃபேல் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடியை களவாடியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீரழித்துவிட்டார்.
 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தின் மூலம் சீரழிந்த பொருளாதாரத்தை சீராக்கும். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு என்பதால், அது தொடர்பாக காவலாளி களவாணிதான் எனக் கூறியதற்கு மன்னிப்புக் கோரினேன். ஆனால், ரஃபேல் ஒப்பந்த ஊழலில் பாஜகவுக்கும், பிரதமருக்கும் எதிராக "காவலாளியே களவாணி' என்ற எனது முழக்கத்தில் மாற்றம் இல்லை.
 தேர்தல் கணிப்பு: பாஜக என்ற கட்டுமானம் உள்ளீடற்று உள்ளது. இக்கட்டுமானம் 10 முதல் 15 நாள்களுக்குள் விழும். பாஜகவின் போக்கை மாற்றுவதற்கு களத்தில் காங்கிரஸ் கடுமையாகப் போராடி வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் எங்களது கணிப்புப்படி பாஜக தோல்வியடைவது தெளிவாகத் தெரிகிறது.
 பாஜகவின் பிரசாரத்தில் எந்தவித உத்தியும் இல்லை. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களாலும், தொடர் கேள்விகளாலும் "தாம் வசமாக சிக்கிக் கொண்டோம், மீள முடியாது' என உணர்ந்த பிரதமரின் முகத்தில் அச்சத்தின் சுவடுகளைப் பார்க்க முடிகிறது.
 தேர்தலுக்குப் பிறகு யார் பிரதமர் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்திய ஊடகங்களைச் சந்திக்க மோடிக்கு தைரியம் இல்லை. குறைந்தபட்சம் வெளிநாட்டு ஊடகங்கள் பங்கேற்கும் செய்தியாளர்கள் கூட்டத்துக்காவது ஏற்பாடு செய்யுமாறு மோடிக்கு யாரேனும் கூறுங்கள் என்றார் ராகுல் காந்தி.
 பேட்டியின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, சுர்ஜேவாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 "தேர்தல் ஆணையம் பாரபட்சம்'
 எதிர்க்கட்சிகள் தொடர்பான விஷயங்களில் மட்டும் தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
 "பாஜக, ஆர்எஸ்எஸ் மீதான புகார் விவகாரங்களை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமலும் உள்ளது. அதே சமயம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அளிக்கும் புகார்களை தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் அணுகி வருகிறது. தேர்தல் ஆணையம் போன்ற ஜனநாயக அமைப்புகளுக்கு நெருக்கடி அளிப்பதே பாஜக, ஆர்எஸ்எஸ்-ஸின் வேலையாக உள்ளது. இது மட்டுமல்ல, உச்சநீதிமன்றம், திட்ட கமிஷன், ரிசர்வ் வங்கி போன்றவற்றிலும் இந்த நெருக்கடியைக் காண முடியும். இதுதான் பாஜவின் அணுகுமுறை.
 இதுபோன்ற சூழலில் தேர்தல் ஆணையம் நெருக்கடிக்கு பணியாது என நாம் எதிர்பார்க்கக் கூடாது. தேர்தல் ஆணையம் தனக்குரிய கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம் போன்ற ஜனநாயக அமைப்புகளை கபளிகரம் செய்வது எதிர்காலத்தில் தீமையான விளைவுகளை உருவாக்கி விடும். இதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. இதுபோன்ற அமைப்புகள் நெருக்கடிக்களுக்கு அடிபணிவது குற்றமாகும் என்றார் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com