ரம்ஜான்: தேர்தல் நேரத்தை மாற்றும் கோரிக்கை நிராகரிப்பு; தேர்தல் ஆணையம்

ரம்ஜான் பண்டிகையையொட்டி, மக்களவைக்கான கடைசி 3 கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி, மக்களவைக்கான கடைசி 3 கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.
 இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் முகமது நிஜாமுதீன் பாஷா, ஆஸாத் ஹயாத் ஆகிய 2 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், "நாடு முழுவதும் தற்போது அனல்காற்று வீசுகிறது. விரைவில் முஸ்லிம்களின் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, மக்களவைக்கான எஞ்சிய 3 கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
 இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தேர்தல் நேரத்தை மாற்றியமைப்பது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 இந்நிலையில், முகமது நிஜாமுதீன் பாஷாவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள பதிலில், வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 மனுதாரரின் கோரிக்கை குறித்து முடிவெடுக்க அதிகாரிகள் கொண்ட குழுவை தேர்தல் ஆணையம் அமைத்தது. அந்தக் குழு, 4 கட்டத் தேர்தல் பணியில் ஈடுபட்டதால் ஊழியர்கள் தற்போது களைப்படைந்துள்ளனர், இந்தச் சூழ்நிலையில், வாக்குப்பதிவு நேரத்தை அதிகாலையில் 5 மணிக்குத் தொடங்கி நடத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது.
 சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் வாக்குப்பதிவு தற்போது 8 மணி நேரம் நடைபெற்று வருகிறது. இதை 11 மணி நேரமாக நீடிப்பது, அதற்கு எதிரானதாக அமைந்துவிடும். எனவே 5,6 மற்றும் 7ஆவது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை மாற்றத் தேவையில்லை என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com