ஒடிஸாவுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி: புயல் சேதங்களை பார்வையிட்ட பின் பிரதமர் அறிவிப்பு

ஒடிஸாவில் பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை, பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர்,
ஒடிஸாவுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி: புயல் சேதங்களை பார்வையிட்ட பின் பிரதமர் அறிவிப்பு


ஒடிஸாவில் பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை, பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர், நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக, ஒடிஸாவுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அந்த நிதி உடனடியாக விடுவிக்கப்பட்டது. 
ஒடிஸாவில் கடந்த வெள்ளிக்கிழமை கரையை கடந்த பானி புயல், புரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சூறையாடியது. இப்புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளை, பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் உடன் சென்றனர்.

இந்த ஆய்வுக்கு பின்னர், செய்தியாளர்களிடம் மோடி கூறியதாவது:
ஒடிஸாவில் புயல் தாக்குவதற்கு முன்பு மத்திய அரசு ரூ.381 கோடி நிதியை விடுவித்திருந்தது. இப்போது, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி உடனடியாக விடுவிக்கப்படும். இதேபோல், புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும்.
நவீன் பட்நாயக் அரசுக்கு பாராட்டு: கடலோர பகுதிகளில் உயிர்ச்சேதங்களை தவிர்ப்பதற்காக நவீன் பட்நாயக் தலைமையிலான மாநில அரசு மேற்கொண்ட முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. குறைவான கால இடைவெளியில் 12 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியது சாதாரண விஷயமல்ல. அது மிகப் பெரிய பணி. அதன் காரணமாகவே, உயிரிழப்புகள் குறைந்தன. 
மத்தியக் குழு அனுப்பப்படும்: ஒடிஸாவில் சுமார் 14,000 கிராமங்களைச் சேர்ந்த 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்தியக் குழு விரைவில் அனுப்பிவைக்கப்படும். அதன் பின்னர், மேலும் நிதியுதவி அளிக்கப்படும். தகவல் தொடர்பு, சுகாதார சேவைகள், குடிநீர், மின்சார விநியோகம் ஆகியவற்றை சீரமைப்பதில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நிவாரணம், மறுசீரமைப்பு பணிகளில் மத்திய அரசும், ஒடிஸா மாநில அரசும் ஒருங்கிணைந்து செயலாற்றும்.
புதிய திட்டம்: ஒடிஸா மாநிலம், இயற்கை பேரிடர்களை அதிகம் சந்தித்து வருகிறது. இதேபோல், கடலோர மாநிலங்களில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதற்கான நீண்டகால செயல்திட்டம் உருவாக்கப்படும். இதில் தங்களுக்குரிய தேவைகள் என்னென்ன என்பது குறித்து தெரிவிக்குமாறு ஒடிஸா அரசை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
ரூ.17,000 கோடி வேண்டும்: இதனிடையே, புவனேசுவரம் விமான நிலையத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோருடன் பிரதமர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, புயல் நிவாரணமாக ரூ.17,000 கோடி நிதி வழங்க வேண்டும்; அடிக்கடி இயற்கை பேரிடர்களை சந்திக்கும் ஒடிஸாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பிரதமரிடம் நவீன் பட்நாயக் அளித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், அடிக்கடி ஏற்படும் இயற்கை பேரிடர்களால் ஒடிஸாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும். தற்போது கடலோர பகுதிகளில் உள்கட்டமைப்பை சீரமைக்கவும், வீடிழந்தவர்களுக்கு வீடுகள் கட்டித் தரவும் ரூ.17,000 கோடியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com