ராஜீவ் குறித்த மோடி விமர்சனம்: காங்கிரஸ் புகார் மீது தேர்தல் ஆணையம் என்ன செய்தது தெரியுமா?

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதில் எந்த தேர்தல் நடத்தை விதிமீறல்களும் இல்லை என்று தேர்தல் ஆணையம் வழக்கமான பச்சைக்கொடியையே காண்பித்துள்ளது.
ராஜீவ் குறித்த மோடி விமர்சனம்: காங்கிரஸ் புகார் மீது தேர்தல் ஆணையம் என்ன செய்தது தெரியுமா?


புது தில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதில் எந்த தேர்தல் நடத்தை விதிமீறல்களும் இல்லை என்று தேர்தல் ஆணையம் வழக்கமான பச்சைக்கொடியையே காண்பித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில் அவர் பேசியதாக காங்கிரஸ் அளித்த புகார் மீது ஆய்வு நடத்தினோம். முதற்கட்ட ஆய்வில், அவரது பேச்சில் எந்தவிதமான தேர்தல் நடத்தை விதி மீறலும் இல்லை என்பது தெரிய வந்ததால், புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளது.

தில்லியில் தேர்தல் ஆணையர்களை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் சுக்லா, சல்மான் குர்ஷித் ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக அவர்கள் புகார் அளித்தனர். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிங்வி, மோடியின் விமர்சனம் இந்திய பாரம்பரியம், கலாசாரம், சட்டத்துக்கு எதிரானது ஆகும். இதுதொடர்பாக மோடிக்கு விளக்கம் கேட்டு 24 மணி நேரத்துக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும், 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். 

குறிப்பாக, தேர்தல் பிரசாரம் செய்ய மோடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே 11 புகார்கள் அளித்துள்ளது. அதன்மீது தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட பின்னரும், தேர்தல் ஆணையம் அமைதியாக உள்ளது. 

எனவே தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காக்க புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கேட்டுக் கொண்டோம்.

போபர்ஸ் பீரங்கி விவகாரத்தில் ராஜீவ் காந்திக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே மனுவை உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி தள்ளுபடி செய்துள்ளது. ஆதலால் இந்த நாடு, சட்டத்தின்படி ஆளப்படுகிறதா? அல்லது பிரதமரின் பேச்சின்படி ஆளப்படுகிறதா? என கேட்கிறேன் என்றார்.

ஜேட்லி பதிலடி: இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் புகாருக்கு மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி பதிலடி கொடுத்துள்ளார். சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவுகளில், நேர்மையான பிரதமரை திருடர் என்று காங்கிரஸார் தெரிவிக்கின்றனர். அப்படி அவர்கள் விமர்சிப்பதை எந்த தேர்தல் நடத்தை நெறிமுறையும் தடுக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் மரபு ஊழல்மயமானது என்று பிரதமர் தெரிவித்தால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் புகார் அளிக்கிறது. நாட்டில் 2 வித தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உள்ளதா? எனத் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com