ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பிரான்ஸ் வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் போன்ற நாடுகள் இடம் பெற வேண்டியது அவசியம் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் போன்ற நாடுகள் இடம் பெற வேண்டியது அவசியம் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, கவுன்சிலில் ஜெர்மனியின் தற்காலிக உறுப்பினர் பதவி நிறைவடைவதையொட்டி ஐ.நா.வில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதர் பிரான்சுவா டெலாத்ரே கூறியதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவதில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரான்ஸும், ஜெர்மனியும் உறுதிபூண்டுள்ளன. கவுன்சிலை விரிவுபடுத்துவதற்கு வழிவகை செய்யும் பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் வெற்றிகரமாக நடத்தியுள்ளன. உலகின் தற்போதைய அரசியல் நிலமையை பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை.
இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு சிறந்த  பிரதிநிதித்துவம் அளிக்கும் இன்னொரு நாடு ஆகியவை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்க வேண்டியது, இன்றைய சூழலில் மிகவும் தேவையான ஒன்றாகும். அந்த நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாகக் கொண்டிருந்தால்தான், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உலகின் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் உள்ளதாகக் கருத முடியும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கூடுதல் உறுப்பினர்களை இணைப்பது, பிரான்ஸின் முன்னுரிமைக் கொள்கைகளில் ஒன்றாகும் என்றார் அவர்.
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த பிறகு, அந்தப் போரில் வெற்றியடைந்த நேசப் படையின் வல்லரசுகளான அமெரிக்கா, சோவியத் யூனியன் (தற்போது ரஷியா), பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. சர்வதேச ராணுவ விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்த அமைப்பில், தற்போது மாறியுள்ள அரசியல் சூழலுக்கு ஏற்ப புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தச் சூழலில், ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com