வாக்கு ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு விவகாரம்: எதிர்க்கட்சிகளின் மறுஆய்வு மனு தள்ளுபடி

வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை, வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விவகாரத்தில்
வாக்கு ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு விவகாரம்: எதிர்க்கட்சிகளின் மறுஆய்வு மனு தள்ளுபடி


வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை, வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விவகாரத்தில், ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி 21 எதிர்க்கட்சிகள் இணைந்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேர்தல் நடைமுறைகளில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 50 சதவீத வாக்குச் சாவடிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளைச் சரிபார்க்க வேண்டும் என்று கோரி தெலுங்கு தேசம் கட்சி தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் மட்டுமே வாக்கு ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
ஒன்றிலிருந்து ஐந்து: எதிர்க்கட்சிகளின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்குப் பதிலாக, 5 வாக்குச் சாவடிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்குமாறு தேர்தல் ஆணையத்துக்குக் கடந்த மாதம் 8-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, எதிர்க்கட்சிகளின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மறுஆய்வு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 5 வாக்குச் சாவடிகளில், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வெறும் 2 சதவீதமே ஆகும். இது தேர்தல் நடைமுறைகளில் எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தாது. நாங்கள் 50 சதவீத வாக்குச் சாவடிகளில் வாக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தோம். இதை 33 சதவீதமாகவோ அல்லது குறைந்தபட்சம் 25 சதவீதமாகவோ அதிகரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பில் திருத்தம் மேற்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்றனர். இதையடுத்து, ஒருவேளை அந்த 5 வாக்குச் சாவடிகளில் பதிவாகும் வாக்குகளைச் சரிபார்க்கும்போது, பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையும், வாக்கு ஒப்புகைச் சீட்டும் சமமாக இல்லையெனில் தேர்தல் ஆணையம் அதன்பிறகு என்ன நடவடிக்கை மேற்கொள்ளும்? இதற்கு எந்த வழிமுறைகளும் இல்லை என்று வழக்குரைஞர் சிங்வி கேள்வி எழுப்பினார்.
 இதற்கு நீதிபதிகள், இது மறுஆய்வு மனுக்கான விசாரணை மட்டுமே. நீங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை என்றனர்.
தொடர்ந்து போராடுவோம்: இதன் பிறகு, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். 
ஆனால், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தத் தொடர்ந்து போராடுவோம். நாட்டில் நேர்மையான தேர்தலை நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அதேபோல், உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 8-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டியதும் தேர்தல் ஆணையத்தின் கடமை. வாக்குகளை ஒப்பிட்டு சரிபார்த்த பின் ஏதேனும் குளறுபடிகள் நேர்ந்திருப்பது தெரியவந்தால், அந்தக் குறிப்பிட்ட மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com