எஸ்எஸ்சி 2017 தேர்வுகள் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி

எஸ்எஸ்சி 2017ஆம் ஆண்டு தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
எஸ்எஸ்சி 2017 தேர்வுகள் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி


எஸ்எஸ்சி 2017ஆம் ஆண்டு தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மத்திய அரசு துறைகளில் காலியாக இருக்கும் பட்டப்படிப்பு, உயர்நிலை கல்வி நிலையிலான பதவிகளுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பணியாளர் தேர்வு ஆணையத்தால் (எஸ்எஸ்சி) தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
இதனிடையே, எஸ்எஸ்சி 2017ஆம் ஆண்டு தேர்வுத் தாள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாக குற்றம்சாட்டியும், அந்தத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், எஸ்எஸ்சி 2017ம் ஆண்டு தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. அப்போது இந்த வழக்கு முடிவை பொறுத்து, தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிடுவது குறித்து அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
எஸ்எஸ்சி 2017ஆம் ஆண்டு தேர்வுகளுக்கான முடிவுகளை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை விலக்கி கொள்ளப்படுகிறது. ஆதலால் அந்த முடிவை பணியாளர் தேர்வு ஆணையம் இனி வெளியிடலாம். அதேநேரத்தில் வேலைவாய்ப்புகளுக்கும், கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும் பாதுகாப்பான முறையில் நுழைவு தேர்வுகள் நடத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை அளிப்பதற்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையில் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்கிறது. இந்தக் குழுவில் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீலகேணி, கணினி விஞ்ஞானி விஜய் பத்கர், கணித பண்டிதர் ஆர்.எல். கரண்திகர், சஞ்சய் பரத்வாஜ், மத்திய அரசு மற்றும் சிபிஐ அமைப்பு பிரதிநிதி ஆகியோர் இடம்பெறுவர். இக்குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் 3 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
முன்னதாக, எஸ்எஸ்சி 2017ஆம் ஆண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, தேசிய தேர்வு அமைப்பு அல்லது சிபிஎஸ்இ அமைப்பால் புதிதாக தேர்வுகள் நடத்த உத்தரவிடுவது குறித்து உச்சநீதிமன்றம் ஆலோசித்தது. 
ஆனால் இதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com