கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் சாத்வி பிரக்யாவுக்கு தொடர்பில்லை

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங்குக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று சிறப்பு புலனாய்வுப் படை(எஸ்ஐடி) விளக்கம் அளித்துள்ளது.
கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் சாத்வி பிரக்யாவுக்கு தொடர்பில்லை


பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங்குக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று சிறப்பு புலனாய்வுப் படை(எஸ்ஐடி) விளக்கம் அளித்துள்ளது.
கன்னட பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளராக விளங்கிய கெளரி லங்கேஷ், 2017-ஆம் ஆண்டு செப்.5-ஆம் தேதி அவரது வீட்டு வாசலில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.  இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுப் படை இதுவரை 16 பேரை கைது செய்துள்ளது.  தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகிறது. 
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் சாத்வி பிரக்யா சிங்குக்கு இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதாக ஆங்கில நாளேடு ஒன்றில் வியாழக்கிழமை செய்தி வெளியானதால், பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுப் படை வெளியிட்ட விளக்கம்:  மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய அபிநவ் பாரத் அமைப்பை சேர்ந்த சாத்வி பிரக்யா சிங்குக்கும் கெளரி லங்கேஷ் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இருப்பதாக எங்கள் விசாரணையில் தெரியவில்லை. 
மேலும்,  அவரது பெயர் குற்றப்பத்திரிகையிலும் இடம்பெறவில்லை. எனவே, சாத்வி பிரக்யா சிங்குக்கு இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதாகக் கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இதுதொடர்பான ஆதாரங்கள் எதையும் கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் நாங்கள் அளிக்கவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. 
சனாதன் சம்ஸ்தா என்ற அமைப்பு கொண்டுவந்த நூலால் ஈர்க்கப்பட்டு,  வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஒருசில உறுப்பினர்கள் கெளரி லங்கேஷைக் கொலை செய்திருப்பதாக சிறப்புப் புலனாய்வுப் படை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதனிடையே, 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட எழுத்தாளர் எம்.எம்.கலபுர்கி கொலை வழக்கையும் சிறப்புப் புலனாய்வுப் படையே விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com