பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: ஐஐஎம் நாகபுரியில் அமல்

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டில்


மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டில் (2019-20) செயல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசமைப்புச் சட்ட விதிகள் 15 மற்றும் 16-இல் திருத்தங்களை மேற்கொண்டு, 103-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு கொண்டு வந்தது. 
அதையடுத்து இந்த சட்டத்தின்படி, இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அனைத்து அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. 
இந்நிலையில், ஐஐஎம்- நாகபுரியில் இந்த இடஒதுக்கீடு முறை நிகழாண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த கல்வி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கான சேர்க்கை 120 இடங்களில் இருந்து 130 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக இந்த ஆண்டு வெறும் 4 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு கூறிய 10 சதவீத இடஒதுக்கீடு அடுத்த கல்வியாண்டில் (2020-21) முழுவதுமாக அமல்படுத்தப்படும். 
இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள், வருமானச் சான்றிதழையும், சொத்து குறித்த சான்றிதழையும் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் இடஒதுக்கீட்டை கோருவதற்கு, மாணவர்கள் முதலில், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவின் கீழ் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்குள்ளாக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி சொந்தமாக 5 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது மற்றும் 1000 சதுர அடி மற்றும் அதற்கு அதிகமான பரப்பளவில் வீடு சொந்தமாக இருக்கக் கூடாது. இந்த விதிமுறைகளுக்குள் அடங்கும் மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க
லாம் என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com