சுடச்சுட

  

  தேர்தலில் போட்டியிட கேஜரிவாலுக்கு ரூ. 6 கோடி பணமா? தில்லி அரசியலில் தொடரும் சர்ச்சை

  By DIN  |   Published on : 11th May 2019 06:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Balbir_Singh


  தேர்தலில் போட்டியிடுவதற்காக மேற்கு தில்லி ஆம் ஆத்மி வேட்பாளர் பால்பீர் சிங் ஜகார் அரவிந்த் கேஜரிவாலுக்கு ரூ. 6 கோடி பணம் கொடுத்ததாக பால்பீர் சிங் மகன் உதய் குற்றம்சாட்டியுள்ளார். 

  தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தில்லியில் தொடக்கம் முதலே ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே தொடர்ந்து சர்ச்சைகள் உருவாகி வந்தது. 

  கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி, பாஜக வேட்பாளர் கௌதம் கம்பீர் இரட்டை வாக்குரிமை வைத்திருப்பதாக புகார் தெரிவித்தார். 

  அதன்பிறகு, அதிஷி குறித்து தவறான, இழிவான தகவல்கள் கொண்ட நோட்டீஸ் அந்த தொகுதியின் செய்தித்தாள்களில் இணைத்து பரப்பப்பட்டது. இந்த செயல்களுக்கு பாஜக தான் காரணம் என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. என் மீதான இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால், அரசியலில் இருந்து விலகுவேன், பொது மக்கள் மத்தியில் தூக்கில் தொங்குவேன் என்று கம்பீர் சவால் விடுத்தார். 

  தேர்தல் சமயத்தில் இவ்வாறு தில்லியை சுற்றி தொடர்ந்து சர்ச்சைகளாக வெடித்து வந்தது. இந்த நிலையில் புதிய சர்ச்சையாக மேற்கு தில்லி ஆம் ஆத்மி வேட்பாளர் பால்பீர் சிங் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு ரூ. 6 கோடி பணம் கொடுத்ததாக அவரது மகன் உதய் குற்றம்சாட்டியுள்ளார். 

  மேற்கு தில்லி ஆம் ஆத்மி வேட்பாளர் பால்பீர் சிங் மகன் உதய் இன்று ஊடகங்களிடம் பேசினார். அப்போது, 

  "தேர்தலில் போட்டியிடுவதற்காக கேஜரிவாலுக்கு ரூ. 6 கோடி கொடுத்துள்ளார். கேஜரிவாலுக்கு பணம் கொடுத்ததாக எனது தந்தை என்னிடம் தெரிவித்தார். இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், ஊழல் ஒழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த கேஜரிவால் ஊழல்வாதியாக இருக்கிறார். 

  நான் இதை மட்டும் உலகுக்கு கூற விரும்பவில்லை.

  நீதிமன்றத்தில் சஜ்ஜன் குமாருக்கு வாதாடவும் எனது தந்தை முடிவு செய்தார். அவரை பிணையில் எடுப்பதற்காக எனது தந்தைக்கு மிகப் பெரிய தொகை வழங்கப்பட்டது. 

  எனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை" என்றார்.          

  ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பால்பீர் சிங் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, 

  "இந்த குற்றச்சாட்டை நான் கண்டிக்கிறேன். வேட்பாளராக நிற்பது குறித்து எனது மகனுடன் நான் எதையுமே ஆலோசித்தது கிடையாது. நான் எனது மகனுடன் மிகவும் அரிதாக தான் பேசுவேன். அவன் பிறந்தது முதல் தாய்வழி பெற்றோர்கள் இல்லத்தில் தான் வசித்து வருகிறான். எனது மனைவியை நான் 2009-இல் விவாகரத்து செய்துவிட்டேன். அவர் என்னுடன் வெறும் 6-7 மாதங்கள் தான் இருந்தார். விவாகரத்துக்குப் பிறகு எனது மகன் தாயுடன் தான் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது" என்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai