சாம் பிட்ரோடா கருத்துக்கு சோனியா, ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு
சாம் பிட்ரோடா கருத்துக்கு சோனியா, ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்: பாஜக வலியுறுத்தல்


1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து,  நடந்தது நடந்து விட்டது. அதனால் இப்போது என்ன? என்று சாம் பிட்ரோடா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பிரதமர் மோடி உள்பட பாஜகவின் பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து பொறுப்பற்ற முறையில் சாம் பிட்ரோடா பதிலளித்துள்ளார். முதலில், முடிந்தது பற்றி தற்போது என்ன? என்றார். இப்போது, சீக்கியர்களின் கஷ்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும், அதற்கும், இப்போதைய சூழலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இரக்கமற்ற வகையில் பேசியுள்ளார். 
சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கும், இன்றைய சூழலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கூறுபவர், எதிர்காலத்தில் நாட்டில் பிரிவினை ஏற்பட்டாலும் அதற்கும் சம்பந்தமில்லை என்றே பதிலளிப்பார். ராகுல் காந்தியின் குரு என்று கூறப்படுபவர் இவ்வாறு கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. இதற்காக சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் ஜாவடேகர்.
வெட்கக்கேடானது..: 1984-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட சீக்கியர்கள் குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்துள்ள கருத்து வெட்கக்கேடானது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், சீக்கியர்கள் கொல்லப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித வருத்தமும் இல்லை. இரக்கமற்ற கருத்தை பிட்ரோடா தெரிவித்திருப்பது அந்த கட்சிக்குதான் அவமானம். இந்த கருத்துக்காக, தனது அரசியல் குருவான பிட்ரோடாவை ராகுல் காந்தி கட்சியில் இருந்து நீக்குவாரா? என்று கேள்வியெழுப்பி உள்ளார்.
மெளனம் ஏன்?..: 1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் குறித்து சாம் பிட்ரோடா கருத்து தெரிவித்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அமைதியாக இருப்பது ஏன்? என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கேள்வியெழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மனநிலை திவாலான அறிவுஜீவிகளை காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளது. பிட்ரோடா கருத்து குறித்து காங்கிரஸ் அமைதி காப்பது ஏன்? சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு மீண்டும் ஒருமுறை நியாயம் கற்பிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது என்று குற்றம்சாட்டினார்.


நான் கூறிய வார்த்தைகளை திரித்துக் கூறுகிறது பாஜக: சாம் பிட்ரோடா
நான் கூறிய வார்த்தைகளை பாஜக திரித்துக் கூறுகிறது என்று சாம் பிட்ரோடா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 1984-இல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் குறித்து நான் தெரிவித்த கருத்தை பாஜக மாற்றிக் கூறுகிறது. சீக்கிய சகோதர, சகோதரிகளின் வலியை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எனினும், கடந்த காலத்துக்கும் இந்த தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டுக்கு பாஜக என்ன செய்தது? என்பது மட்டுமே இப்போது விவாதப் பொருளாக இருக்க வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவருமே மக்களை இனம் பிரித்து பார்த்ததில்லை. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு  ராஜீவ் காந்தி உத்தரவிட்டதாக கூறுகிறார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மட்டுமே ராஜீவ் காந்தி முக்கியத்துவம் அளித்தார். உண்மை திரித்து கூறப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொய்கள் அம்பலமாகி, உண்மை நிச்சயம் அனைவருக்கும் தெரிய வரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com