மக்களின் பிரச்னைகளை மோடி பேச மாட்டார்: பிரியங்கா விமர்சனம்

பாகிஸ்தான் குறித்தும், அவதூறான விஷயங்களையும் மட்டுமே பிரதமர் மோடி தனது பிரசாரக் கூட்டங்களில் பேசுவார், ஆனால் உண்மையில் நாட்டு மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை அவர் பேசமாட்டார் என்று காங்கிரஸ்
மக்களின் பிரச்னைகளை மோடி பேச மாட்டார்: பிரியங்கா விமர்சனம்


பாகிஸ்தான் குறித்தும், அவதூறான விஷயங்களையும் மட்டுமே பிரதமர் மோடி தனது பிரசாரக் கூட்டங்களில் பேசுவார், ஆனால் உண்மையில் நாட்டு மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை அவர் பேசமாட்டார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஆணவப் போக்கில் செயல்பட்டும் வரும் பாஜக, மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையும், எதிர்மறையான கருத்துகளையும், பிரிவினையையும் உருவாக்கும் வகையில் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது. மத்தியப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லிக்கு வந்து போராட்டம் நடத்தினர். அப்போது, பிரதமர் மோடி தனது பங்களாவை விட்டு வெளியே வந்து, 5 நிமிடம் செலவிட்டு அவர்களது குறைகளைக் கேட்க முன்வரவில்லை. 
ஆனால், இப்போது தேர்தல் வந்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கின்றார்.
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியபோது, தங்களிடம் போதிய நிதியில்லை என்று மத்திய அரசு கூறியது. ஆனால், பெரும் தொழிலதிபர்களின் பல நூறு கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கு மட்டும் எப்படி பணம் வந்தது?.  விவசாயிகள் போதிய வருவாய் இன்றி துன்பத்தில் ஆழ்ந்து வரும் நிலையில், மோடியின் நண்பருக்குச் சொந்தமான நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி லாபம் ஈட்டியுள்ளன.
காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தபடி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டது. நோக்கம் உண்மையாக இருந்தால் அதனை நிச்சயமாக நிறைவேற்ற முடியும். ஆனால், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் பேசமட்டுமே செய்வார்கள்; எதையும் நிறைவேற்ற மாட்டார்கள். ஏனென்றால், மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நோக்கம். மக்களுக்கு நன்மை செய்வது அவர்களின் நோக்கமல்ல.
நமது பிரதமர் தனது தேர்தல் பிரசாரங்களில் பாகிஸ்தான் குறித்து கடுமையாகச் சாடி பேசுவார். மற்றவர்கள் குறித்து அவதூறான விஷயங்களை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார். ஆனால், நாட்டில் மக்கள் உண்மையாகவே என்ன பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர் என்பது குறித்து ஒரு வார்த்தைகூட பேசமாட்டார்.
மக்களிடம் வாக்கு என்று ஒரு வலிமையான சக்தி உள்ளது. அதனை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, அனைவரும் நன்கு யோசித்து நமக்கு நன்மை செய்வது யார் என்பதைப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார் பிரியங்கா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com