ராகுலுக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தவறான கருத்து கூறியதாகத் தொடுக்கப்பட்ட அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம்
ராகுலுக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு


ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தவறான கருத்து கூறியதாகத் தொடுக்கப்பட்ட அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. 
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது கடந்த மாதம் 10-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்களின் அடிப்படையிலும் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. 
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி, நாட்டின் காவலாளி 
(பிரதமர் மோடி), திருடன் என்பதை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மீது தனது சொந்தக் கருத்துகளைத் திணிப்பதாகவும், நீதிமன்றத் தீர்ப்பைத் தவறாகச் சித்திரிப்பதாகவும் கூறி, ராகுலுக்கு எதிராக 
பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார்.
வழக்கை முடித்துவைக்க வேண்டும்: இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் கே.எம். ஜோசப், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தவறான கருத்து கூறியதற்காக, ராகுல் காந்தி ஏற்கெனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிவிட்டார். எனவே, மனுதாரர் தொடுத்துள்ள அவமதிப்பு வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்று வாதிட்டார்.
பொதுவெளியில் மன்னிப்பு: இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி வாதிடுகையில், இந்த விவகாரத்தில், ராகுல் காந்தியின் மன்னிப்பை நிராகரித்து, சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது தவறான கருத்துக்காக, மக்களிடம் பொதுவெளியில் மன்னிப்பு கோர நீதிமன்றம் ராகுலுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகக் கூறினர். 
முன்னதாக, இந்த விவகாரத்தில், தனது 3 பக்க புதிய பிரமாணப் பத்திரத்தை ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தார். 
அதில், உச்சநீதிமன்றத்தின் மீது நான் (ராகுல் காந்தி) மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன்.
 ரஃபேல் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து தவறான கருத்து கூறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். அப்படியான கருத்தை நான் வேண்டுமென்றே கூறவில்லை; கவனக்குறைவு காரணமாகவே தெரிவித்துவிட்டேன் என்று ராகுல் கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com