மக்களவை 6-ஆம் கட்டத் தேர்தல்: 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

மக்களவைக்கு 6-ஆவது கட்டமாக 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.
மக்களவை 6-ஆம் கட்டத் தேர்தல்: 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

மக்களவைக்கு 6-ஆவது கட்டமாக 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.
 மக்களவையில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 5 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன.
 இந்நிலையில், 6ஆவது கட்டமாக உத்தரப் பிரதேசம் (14), ஹரியாணா (10), பிகார் (8), மத்தியப் பிரதேசம் (8), மேற்கு வங்கம் (8), தில்லி (7), ஜார்க்கண்ட் (4) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 இவர்களில் மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, ராதா மோகன் சிங், நரேந்திர சிங் தோமர், கிருஷண் பால் குர்ஜார், ராவ் இந்தர்ஜித் சிங், ஹர்ஷவர்தன், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, அவரது மகன் தேவேந்தர் சிங் ஹூடா, பாஜக மூத்த தலைவர் பிரக்யா சிங் தாக்குர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் முக்கிய பிரமுகர்கள் ஆவர். இவர்களைத் தவிர்த்து குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆகியோரும் தேர்தல் களத்தில் உள்ளனர்.
 6ஆவது கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளில் கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 45 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திரிணமூல் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2, சமாஜவாதி, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் தலா 1 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.
 தேர்தலையொட்டி, 59 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்குவங்க மாநிலம், ஜங்கல்மகால் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும்.
 இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தலாம் என்பதால் மத்திய பாதுகாப்புப் படையினர் வாகனங்களில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 மேற்கு வங்கத்தில் கடந்த 5 கட்டத் தேர்தல்களிலும் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களை கருத்தில் கொண்டு, இந்த முறை வன்முறையின்றி தேர்தல் அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புப் படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com