வெறுப்பைக் காட்டும் மோடியை அன்பால் வெல்வேன்: ராகுல் காந்தி

"பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் என் குடும்பத்தினர் மீது வெறுப்பைக் காட்டுகிறார்கள்; ஆனால் அவர்களை நான் அன்பால் வெல்வேன்' என்று
வெறுப்பைக் காட்டும் மோடியை அன்பால் வெல்வேன்: ராகுல் காந்தி

"பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் என் குடும்பத்தினர் மீது வெறுப்பைக் காட்டுகிறார்கள்; ஆனால் அவர்களை நான் அன்பால் வெல்வேன்' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஊழலில் முதன்மையானவர் என்று மோடி தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி, இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் விராட் கப்பலை, தனது குடும்ப சுற்றுலாவுக்கு ராஜீவ் காந்தி பயன்படுத்தியதாக மோடி குற்றம்சாட்டியிருந்தார். இதைக் குறிப்பிட்டு ராகுல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 மக்களவைத் தேர்தலையொட்டி, மத்தியப் பிரதேச மாநிலம், சுஜல்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரகலாத் திபானியாவை ஆதரித்து ராகுல் பேசியதாவது:
 பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் என் குடும்பத்தினர் மீது வெறுப்பைக் காட்டுகிறார்கள். அந்த வெறுப்பை அகற்ற வேண்டியதே என் வேலை. மோடி என்னை விமர்சிக்கிறார். என் தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி ஆகியோர் குறித்தும் அவதூறாக பேசுகிறார்.
 நாடாளுமன்ற விவாதத்தின்போது, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நான் கேள்வி எழுப்பினால், எனது குடும்பத்தினரை பற்றி மோடி பேசுகிறார்.
 பிரதமராக இருப்பவர் வெறுப்புணர்வை அகற்றிவிட்டு, அன்புடன் பணியாற்ற வேண்டும். அதுதான் பலனளிக்கும். என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் எவ்வளவு வெறுப்பை வேண்டுமானாலும் அவர் காட்டட்டும். அதற்கு பதிலுக்கு நான் அவரை வெறுக்கப் போவதில்லை. அவரை நான் கட்டியணைப்பேன். வெறுப்பை, வெறுப்பால் வெல்ல முடியாது. நரேந்திர மோடியையும், அவரது வெறுப்பையும் அன்பால் மட்டுமே வெல்ல முடியும்.
 கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, அனைத்து மக்களின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்துவதாக மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை.
 ஆனால் நான் செய்ய முடிந்தவற்றையே வாக்குறுதியாக அளிப்பேன். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டது.
 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72, 000 வழங்கும் குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமல் உள்ளிட்ட நடவடிக்கைகளால், மக்களின் பொருள்கள் வாங்கும் திறன் குறைந்து விட்டது. இந்த குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தால் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். அது நாட்டின் பொருளாதாரத்திலும் வளர்ச்சியை ஏற்படுத்தும்.
 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், காலியாக இருக்கும் 22 லட்சம் அரசு பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். அதுமட்டுமன்றி, பஞ்சாயத்துகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார் ராகுல்.
 விவாதத்துக்கு தயாரா?..: இதைத் தொடர்ந்து கார்கோனில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், " ரஃபேல் போர்விமான ஒப்பந்தம் குறித்து விவாதிக்க மோடி தயாரா? என்று ராகுல் காந்தி சவால் விட்டார். இதுதொடர்பாக அவர் மேலும் பேசுகையில், " ஒரு நாளைக்கு சுமார் 21 மணி நேரம் பணியாற்றுவதாக மோடி கூறுகிறார். அனைவரும் உறங்கிய பின்னர் இரவு நேரத்தில் மக்கள் பணத்தை ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் அனில் அம்பானிக்கு மோடி அனுப்புகிறார்.
 21 மணி நேரம் யோசித்தும்கூட, அவரால் எனது கேள்விகளுக்கு பதிலளிக்க இயலவில்லை. குஜராத் அல்லது நாடாளுமன்றம், எங்கு வேண்டுமானாலும் விவாதம் நடத்த நான் தயார். வெறும் 15 நிமிடங்களுக்கு மேல் அவரால் என் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாது. மோடி பலூன் வரும் 23-ஆம் தேதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறும்(தேர்தலில் மோடி தோற்பார் என்பதை இவ்வாறு ராகுல் தெரிவித்தார்)' என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com