மோடியின் ஆட்சியில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி: அமித் ஷா பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மோடியின் ஆட்சியில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி: அமித் ஷா பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 ஹிமாசலப் பிரதேச மாநிலம், சம்பா மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
 ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, தங்களது மாநிலத்துக்கு தனியாக பிரதமர் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பதிகார சட்டம் வாபஸ் பெறப்படும் என்றும், தேசத் துரோக சட்டத்தில் திருத்தம் செய்யபப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும், அக்கட்சியின் மனோபாவத்தையே வெளிப்படுத்துகின்றன.
 அதேநேரத்தில், மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து, மோடி மீண்டும் பிரதமரானால், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் 370ஆவது சட்டப் பிரிவு வாபஸ் பெறப்படும்.
 தேச பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது, எல்லையில் நமது வீரர்கள் 4 பேரின் தலைகளை பாகிஸ்தான் துண்டித்து எடுத்துச் சென்றது. இதற்கு பதிலடியாக மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. அதேநேரத்தில், மோடி அரசோ, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலாகோட்டில் விமானப்படை மூலம் குண்டுவீசியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
 சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் குறித்து காங்கிரஸிடம் கேள்வி கேட்டால், அதற்கு என்ன? என்று தெரிவிக்கும். அதேபோல், மும்பைத் தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டாலும், அதற்கு என்ன? எனத் தெரிவிக்கும்.
 நாட்டில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், ஊழல் குறித்து பிரசாரம் செய்யப்படாத தேர்தல் இதுதான். இதற்கு, மோடி ஆட்சியில் ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டதுதான் காரணம்.
 மோடி அரசின் ஆட்சியின்கீழ், ஹிமாசலப் பிரதேசத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், மேலும் பல பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அமித் ஷா.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com