ராணுவ நடவடிக்கை குறித்து மோடி விளக்கம்: தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் புகார்

மிக முக்கியமான ராணுவ நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொண்டதால், பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நெறிமுறைகளை மீறி விட்டதாக, தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கொடுத்துள்ளது.

மிக முக்கியமான ராணுவ நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொண்டதால், பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நெறிமுறைகளை மீறி விட்டதாக, தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கொடுத்துள்ளது.
 வாக்காளர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே, பாலாகோட் தாக்குதல் பற்றிய விவரங்களை அவர் விளக்கியுள்ளார் என்றும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 தனியார் தொலைக்காட்சிக்கு மோடி சனிக்கிழமை அளித்த பேட்டியில், பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை கடந்த பிப்ரவரியில் தாக்குதல் நடத்தியது எப்படி என்பது குறித்து விளக்கமாகக் கூறினார். மோசமான வானிலை நிலவியபோதும், விமானப் படை அதிகாரிகளின் அறிவுறுத்தலை பொருள்படுத்தாமல், பாலாகோட்டில் தாக்குதல் நடத்துவதற்கு தாம் உத்தரவிட்டதாக அந்தப் பேட்டியில் மோடி கூறியிருந்தார்.
 இந்தப் பேட்டியைக் குறிப்பிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேர்தல் ஆணையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
 நாட்டின் ராணுவம் இந்தியர் அனைவருக்கும் சொந்தமானது. அதன் செயல்பாடுகளுக்கு எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது. இதை மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு முன் தேர்தல் ஆணையம் பல முறை கூறிவிட்டது. இருப்பினும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளை வேண்டுமென்றே மீறி, வாக்காளர்களைக் கவர வேண்டும் என்ற நோக்கத்தில் மோடி பேட்டியளித்துள்ளார்.
 அவரது செயல்பாடுகள், தேர்தல் ஆணையத்தையும், நமது ஜனநாயகத்தையும் கேலி செய்வதாக உள்ளது. எனவே, மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, தேர்தல் ஆணையத்தின் கெளரவம், மரியாதை, நம்பகத்தன்மை ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டும் என்று நம்புகிறோம்.
 இதற்கு முன்பும், பிரதமர் மோடியும், மற்ற பாஜக தலைவர்களும் தேர்தல் நடத்தை நெறிகளை மீறியுள்ளனர். ஆனால், அவர்கள் மீதான புகாரில் தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அவர்களுக்குப் பொருந்ததாதுபோல் தெரிகிறது. இதை கேலிச்சித்திரங்களாக, தலையங்கமாக, கட்டுரைகளாக பத்திரிகைகள் எழுதிவிட்டன. எனவே, மோடி செய்தது தவறு என்பதை நிரூபித்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com