மோடியை கண்டால் பாஜக பெண்களுக்கு அச்சம்: மாயாவதி

பிரதமர் நரேந்திர மோடியை கண்டால் பாஜகவை சேர்ந்த பெண்கள் அச்சப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
மோடியை கண்டால் பாஜக பெண்களுக்கு அச்சம்: மாயாவதி


பிரதமர் நரேந்திர மோடியை கண்டால் பாஜகவை சேர்ந்த பெண்கள் அச்சப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தலித் பெண், கடத்தி செல்லப்பட்டு கணவர் முன்னிலையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸிடம் அப்பெண்ணின் கணவர் புகார் அளிக்க சென்றபோது, அதை அவர்கள் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. பின்னர் கடந்த 2ஆம் தேதி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து தலித் பெண்ணின் கணவர் அளித்த பேட்டியில், தனது புகார் மீது போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மோடி, தலித் பெண் குறித்து உண்மையிலேயே பகுஜன் சமாஜுக்கு அக்கறை இருந்தால், ராஜஸ்தான் அரசுக்கான ஆதரவை அக்கட்சி வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பாஜகவைச் சேர்ந்த பெண்களுக்கு, தங்களது கணவர் பிரதமர் மோடிக்கு அருகில் சென்றாலே பயப்படுகிறார்கள். பிரதமர் மோடியை போல தங்களது கணவரும் மனைவியை கைவிட்டு விடுவார் என்று பாஜக பெண்கள் அச்சப்படுகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் மோடிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நான் கோரிக்கை விடுக்கிறேன். இதுதான் மோடியால் கைவிடப்பட்ட அவரது மனைவிக்கு நாம் அளிக்கும் மரியாதை ஆகும்.
ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மோடி மௌனமாக இருந்தார். அந்த சம்பவம் குறித்து நான் பேச ஆரம்பித்த பிறகுதான் மோடி அறிக்கை விட்டார். அப்படிப்பட்ட மோடி, இந்த விவகாரத்தை முன்வைத்து மோசமான அரசியல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இப்படி செய்வதால், தேர்தலில் பாஜக பலனடையும் என எண்ணுகிறார். இது மிகவும் வெட்கக்கேடான விஷயமாகும்.
அரசியல் ஆதாயங்களுக்காக மனைவியை கைவிட்டவர் எப்படி பிறருடைய சகோதரிகளையும், மனைவியையும் மதிப்பார்? கொடிய குற்றங்களையும் மோடி தனது அரசியல் ஆதாயங்களுக்கு பயன்படுத்துகிறார்.
அல்வார் சம்பவத்தால் பகுஜன் சமாஜ் கட்சி கவலையும், வருத்தமும் அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்துக்காக ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசித்து வருகிறது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று அந்த அறிக்கையில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com