வீடுதோறும் மோடி அலை: மோடி பெருமிதம்

நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மோடி அலை வீசுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், ரட்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து கௌரவிக்கும் அக்கட்சி நிர்வாகிகள்.
மத்தியப் பிரதேச மாநிலம், ரட்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து கௌரவிக்கும் அக்கட்சி நிர்வாகிகள்.


நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மோடி அலை வீசுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், ரட்லத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், இதுகுறித்து அவர் பேசியதாவது: எந்த அலையும் இல்லை என்று பண்டிதர்கள் (எதிர்க்கட்சியினர்) தெரிவிக்கின்றனர். இந்தக் கற்பனை செய்திகள் அனைத்தும், தில்லியில் இருந்துதான் வெளியிடப்படுகின்றன. முதலில் அவர்கள் எந்த அலையும் வீசவில்லை என்றனர். தற்போது வாக்குப்பதிவு சதவீதம் முன்பிருந்ததை விட அதிகரித்துள்ளது. அதனால் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் இளம் நண்பர்களும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை கிடைப்பதை உறுதி செய்துள்ள தங்களது சகோதரருக்கு (பாஜக வேட்பாளர்) வாக்களிப்பது என்று முடிவு செய்துவிட்ட தாய்மார்களும், சகோதரிகளும் வாக்களிப்பதில் சாதனைகள் படைத்து வருகின்றனர். சமையல் எரிவாயு மற்றும் மின்சாரத்தை யார் அளித்தாரோ, அவரை பிரதமராக தேர்வு செய்வது என்றும் தாய்மார்களும், சகோதரிகளும் தீர்மானித்து விட்டனர். இதனால் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்குகளை அவர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.
தாய்மார்களும், சகோதரிகளும் வந்து திரளாக வாக்களித்து வருவதால், எங்கிருந்து அலை வீசுகிறது என்று புரிந்து கொள்ள முடியாமல் பண்டிதர்கள் தவிக்கின்றனர். அந்த அலையானது, ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வருகிறது.
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் மேற்பார்வையில்தான், போபால் துயரம், காமன்வெல்த் முறைகேடு, 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் போன்ற ஊழல்கள் நடைபெற்றன. இதற்கு அக்கட்சி, நடந்தது நடந்து விட்டது, அதனால் என்ன? எனத் தெரிவிக்கிறது.
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் நேரிட்ட தீ விபத்தில், ரட்லத்தைச் சேர்ந்த லெப்டினென்ட் கமாண்டர் தர்மேந்திர சிங் தனது உயிரைத் தியாகம் செய்தார். அப்படியிருக்கையில்,  ஐஎன்எஸ் விராட் போர்க் கப்பலை தங்களது சுற்றுலாவுக்கு சோனியா காந்தி குடும்பத்தினர் பயன்படுத்தி உள்ளனர். இதுகுறித்து கேள்வி கேட்டால், நடந்தது நடந்து விட்டது, அதனால் என்ன? என்று வெட்கமில்லாமல் காங்கிரஸ் தெரிவிக்கிறது. பயங்கரவாதத்திலும், நக்ஸலைட்டுகள் தாக்குதலிலும் பாதுகாப்புப் படையினர் உயிரிழக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, நடந்தது நடந்து விட்டது, அதனால் என்ன? என கேட்கிறது. அந்த வார்த்தைகளானது, வெறும் வார்த்தைகள் மட்டும் கிடையாது. காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம், அக்கட்சியின் அகந்தை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மக்கள் தற்போது பொறுத்தது போதும் எனத் தெரிவிக்கின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியிலிருக்கும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டது. மக்கள், கடவுளுக்கு இணையானவர்கள். அந்த கடவுளை காங்கிரஸ் கட்சி மோசடி செய்து விட்டது. பாரத் மாதா கீ ஜே கோஷத்தை எழுப்புவதற்கு காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்தது.
காங்கிரஸ் வாரிசுகளின் தலைமையிலான அரசின் தவறான கொள்கைகளால், நாட்டில் தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடைபெற்றன. அக்குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் இருந்தோருக்கு, பாகிஸ்தானில் இருப்போருடன் தொடர்பு இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி, நடந்தது நடந்து விட்டது, அதனால் என்ன எனத் தெரிவிக்கிறது.
போபால் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், தேர்தலில் வாக்களிக்க கூட செல்லவில்லை. குடியரசு தலைவர் உள்பட ஒட்டுமொத்த நாடும் வாக்களித்தது. ஆனால் திக்விஜய் சிங் மட்டும் அச்சத்தில் வாக்களிக்க செல்லவில்லை என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com