நாளை இரவுடன் பிரசாரங்களை முடித்துக்கொள்ள வேண்டும்: மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவு

அமித் ஷா பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து, தேர்தல் பிரசாரங்களை ஒரு நாள் முன்னதாக நாளை இரவுடன் முடித்துக்கொள்ளுமாறு மேற்கு வங்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
நாளை இரவுடன் பிரசாரங்களை முடித்துக்கொள்ள வேண்டும்: மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவு


அமித் ஷா பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து, தேர்தல் பிரசாரங்களை ஒரு நாள் முன்னதாக நாளை இரவுடன் முடித்துக்கொள்ளுமாறு மேற்கு வங்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

17-வது மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப் பதிவு, 8 மாநிலங்களில் உள்ள 59 மக்களவைத் தொகுதிகளில் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டம் டம், பராசத், பசீர்ஹத், ஜேநகர், மதுராபூர், ஜாதவ்பூர், டயமண்ட் ஹார்பர், தெற்கு கொல்கத்தா மற்றும் வடக்கு கொல்கத்தா ஆகிய 9 மக்களவைத் தொகுதிகளிலும் அடங்கும்.   

இந்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று (செவ்வாய்கிழமை) கொல்கத்தாவில் தேர்தல் பிரசார பேரணி மேற்கொண்டார். அந்த பேரணியின் போது வித்யாசாகர் கல்லூரி விடுதி அருகே அமித் ஷாவின் வாகனத்தில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அந்த பகுதியில் வன்முறை வெடித்தது. அப்பகுதியில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். 

இந்த சம்பவத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. 

கொல்கத்தாவில் நிகழ்ந்த இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் அரங்கேறி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் தேர்தல் ஆணையம் அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 9 தொகுதிகளில் அரசியல் கட்சிகள் நாளை இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக தான் தேர்தல் பிரசார தடைக்காலம் அமலுக்கு வரும். வாக்குப்பதிவு நடைபெற்று முடியும் வரை அது அமலில் இருக்கும். ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாகவும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவேண்டும் என்ற காரணத்துக்காகவும் இந்த விதிக்கு மாறான ஒரு அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

இதன்மூலம், அரசியல் கட்சிகள் மேற்கு வங்க மாநிலத்தில் நாளை இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொள்ளமுடியாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com