
பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு செல்லிடப்பேசி செயலிகளைப் பயன்படுத்த மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
நாட்டின் 7-ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதை சிஎஸ்சி மின்னாளுமை நிறுவனத்துடன் இணைந்து மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் மேற்கொள்கிறது. இந்நிலையில், கணக்கெடுப்பு தொடர்பாக சிஎஸ்சி நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட குறிப்பில், ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு செல்லிடப்பேசி செயலியின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தக் கணக்கெடுப்பின் தரம், இரட்டை மேற்பார்வையில் உறுதிசெய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பொருளாதாரக் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ள நபர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முகாம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் மத்திய புள்ளியியல் அமைச்சக செயலர் பிரவின் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது: ஜூன் மாதம் முதல் கணக்கெடுப்பில் ஈடுபட நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதில் பங்கேற்கவுள்ள நபர்களுக்கு நாடு முழுவதும் 6,000க்கும் மேற்பட்ட பயிற்சி முகாம்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். மாநில அளவிலான பயிற்சி முகாம் மத்தியப் பிரதேசத்தில் தொடங்கவுள்ளது. அதன்பிறகு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்கள் நடைபெறும்.
புள்ளியியல் துறை அமைச்சகத்தின் பொருளாதாரக் கணக்கெடுப்பு இயக்குநர் ஜோதிர்மோய் பாடர் கூறுகையில், கணக்கெடுப்பை 3 மாதங்களில் நிறைவுசெய்யத் திட்டமிட்டுள்ளோம். கணக்கெடுப்புப் பணியில் 9 லட்சம் நபர்களும், அதைக் கண்காணிக்கும் பணியில் 3 லட்சம் நபர்களும் ஈடுபட உள்ளனர் என்றார்.