நான் அந்நியன் இல்லை: மம்தா குற்றச்சாட்டுக்கு பதிலடி

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கத்துக்கு வந்த அந்நியர் என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ள நிலையில்,


பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கத்துக்கு வந்த அந்நியர் என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ள நிலையில், நான் அந்நியன் இல்லை; தேர்தல் பிரசாரத்துக்காகவே வந்தேன் என்று அமித் ஷா பதிலடி தந்துள்ளார்.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்காக அமித் ஷா என்ற அந்நியர் மேற்குவங்கத்துக்கு வருகிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா கூறியதாவது:
பாஜக ஒரு தேசிய கட்சி. அக்கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில் எனது கட்சிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இங்கு வருகிறேன். ஆனால் என்னை அந்நியர் என்று கூறுவது எந்த விதத்தில் சரி? இந்தியாவின் மிகப்பெரிய பகுதிகளில் ஒன்றான மேற்குவங்கத்துக்கு நான் வருவதை அந்நியம் என்று மம்தா கூறுவது ஆச்சரியமாக உள்ளது. 
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர், தில்லி அல்லது மும்பைக்கு சென்றால், அவர் அந்நியர் ஆகிவிடுவாரா? மம்தா தில்லிக்கு செல்கிறார். அங்கு அவர் அந்நியரா? என்று கேள்வி எழுப்பினார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வர் ஆவாரே தவிர,  நானோ, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், பாஜக தேசிய பொதுச் செயலாளருமான கைலாஷ் விஜய்வர்கியாவோ முதல்வராக முடியாது.
பாஜக பேரணியின்போது நடைபெற்ற வன்முறைக்கு பாஜகவினர்தான் காரணம் என்று ஊடகத்தைச் சேர்ந்த ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
ஆனால், உண்மையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ரெளடிகளே எனது வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். ஊடகங்கள் இதை மறைத்து, மம்தாவுக்கு ஆதரவாக செய்தி வெளிவிடுகின்றன என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com