வித்யாசாகர் சிலை சேதம்: மம்தா கண்டன பேரணி

கொல்கத்தாவில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் வங்க எழுத்தாளர் ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, மாநில முதல்வர் மம்தா
கொல்கத்தாவில் புதன்கிழமை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் புடைசூழ கண்டனப் பேரணி நடத்திய மம்தா பானர்ஜி.
கொல்கத்தாவில் புதன்கிழமை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் புடைசூழ கண்டனப் பேரணி நடத்திய மம்தா பானர்ஜி.


கொல்கத்தாவில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் வங்க எழுத்தாளர் ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை 6 கி.மீ. தூரத்துக்குப் பேரணியாக நடந்து சென்றார்.
இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கொல்கத்தாவில் பாஜக சார்பில் பிரமாண்டமான பேரணிக்கு செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி கொல்கத்தாவின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்றது. அப்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர், பேரணியில் பங்கேற்றவர்களை நோக்கி சரமாரியாகக் கற்களை வீசினர். இதையடுத்து, பாஜக ஆதரவாளர்கள் அவர்களை விரட்டத் தொடங்கினர். இதில் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இது பெரும் வன்முறையாக மாறியது. இதையடுத்து, காவல் துறையினர் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.
மம்தா பேரணி: இந்நிலையில், இந்த வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்து, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 6 கி.மீ. தூரத்துக்குக் கண்டனப் பேரணி நடத்தினார். கொல்கத்தாவின் பெலியகடா பகுதியிலிருந்து ஷியாம்பஜார் பகுதி வரை அவர் பேரணியாக நடந்து சென்றார். அந்தப் பேரணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் திரளாகப் பங்கேற்றனர்.
வன்முறை தொடர்பாக, தில்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் அரசியல்தளத்தில் வன்முறையை பாஜக தொடர்ந்து புகுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் மாநிலங்களின் கலாசார அடையாளங்களை அழித்துவருகின்றனர். மக்களிடையே வன்முறையைத் தூண்டுவதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். 
மாநிலங்கள் மீது ஆதிக்கம்: மாநிலங்களின் மொழி, தனித்துவம், உணவுப் பழக்கவழக்கங்கள், கலாசாரம், கூட்டாட்சி முறை ஆகியவற்றின் மீது பாஜக ஆட்சியில் தாக்குதல் நடைபெற்று வருகின்றன. மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்த பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், மாநிலங்களின் ஒற்றுமையை அதிகரிக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே இந்தியாவின் வடக்குப் பகுதியில் ஒரு தொகுதியிலும், தெற்குப் பகுதியில் ஒரு தொகுதியிலும் ராகுல் போட்டியிடுகிறார்.
அமித் ஷாவின் பேரணியில் வங்க எழுத்தாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஈஷ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. பெண் கல்வி, விதவை மறுமணம் உள்ளிட்டவற்றுக்காகப் போராடியவர் வித்யாசாகர். அவரது சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது மிகவும் வெட்கக்கேடான செயலாகும் என்றார் அவர்.
திட்டமிட்ட தாக்குதல்: இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியதாவது:
இது வித்யாசாகரின் சிலை மீது மட்டுமல்லாமல், மேற்கு வங்கத்தின் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் ஆகும். மேற்கு வங்கத்தின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதியை ஆர்எஸ்எஸ்-பாஜக தொண்டர்கள் தாக்கியுள்ளனர். அந்தத் தொண்டர்களே வித்யாசாகரின் கொள்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இதற்கெல்லாம் மேற்கு வங்கம் பணியாது.
அறிவின் கடலாக விளங்கியவர் வித்யாசாகர். அவர் வளர்ச்சிக்காகவும், சீர்திருத்தங்களுக்காகவும் குரலெழுப்பினார். இதன் காரணமாகவே அவரது கொள்கைகளை அழிக்க ஆர்எஸ்எஸ் முயற்சித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com