ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரும் விவகாரம் தொடர்பாக
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரும் விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கும் (சிபிஎஸ்இ) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சிடெட்) பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல், அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மறுத்துள்ளனர் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேர்வாளர்கள் சிலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103-ஆவது அரசமைப்புச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரியில் நிறைவேற்றியது.
இதன் பலன் சம்பந்தப்பட்ட நபர்களைச் சென்றடைய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், நாங்கள் எளிதில் தேர்வில் வெற்றிபெறுவோம். இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்று வாதிட்டார்.
தலையிட முடியாது: இதைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நாங்கள் தற்போது எதுவும் கூற விரும்பவில்லை. இது கொள்கை ரீதியிலான முடிவு. மத்திய அரசே இதில் முடிவெடுக்க முடியும். 
இதில் நாங்கள் தலையிட முடியாது. வரம்புமீறல்கள் இருந்தால் மட்டுமே எங்களால் தலையிட முடியும் என்றனர். 
இதையடுத்து, இந்த மனு மீது ஜூலை 1-ஆம் தேதிக்குள் பதிலளிக்கக் கோரி மத்திய அரசு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், தேசிய ஆசிரியர் கல்விக் குழு (என்சிடிஇ) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனு மீதான அடுத்தகட்ட விசாரணையையும் ஜூலை 1-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முன்னதாக, இந்த மனு மீது கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படலாம். ஆனால், தகுதித் தேர்வுகளில் எந்தவொரு இடஒதுக்கீட்டு முறையும் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
மனு விவரம்: மனுதாரர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: 
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பாகக் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி சிபிஎஸ்இ அறிவிக்கை வெளியிட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, இத்தேர்வில் அனுமதிக்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போல பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிக்கையானது, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மறுக்கும் வகையில் உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com