எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் அளவுக்கு மக்களால் விரும்பப்படுவேன்: பிரதமர் நரேந்திர மோடி

எதிர்க்கட்சிகள் என்னை எந்த அளவுக்கு விமர்சிக்கிறார்களோ, அந்த அளவுக்கு மக்களால் விரும்பப்படுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் அளவுக்கு மக்களால் விரும்பப்படுவேன்: பிரதமர் நரேந்திர மோடி


எதிர்க்கட்சிகள் என்னை எந்த அளவுக்கு விமர்சிக்கிறார்களோ, அந்த அளவுக்கு மக்களால் விரும்பப்படுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக சீர்திருத்தவாதி ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த குண்டர்கள் இருக்கிறார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியதாவது:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அணுகுமுறையை நாடே கண்டுவருகிறது. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் பேரணியில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் வன்முறையைத் தூண்டிவிட்டு, ஈஷ்வர் சந்திர வித்யாசாகரின் சிலையைச் சேதப்படுத்தியுள்ளனர். அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.
ஐம்பொன்னாலான புதிய சிலை: வித்யாசாகரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் பாஜக தலைமையிலான அரசு, அவரது சிலை சேதப்படுத்தப்பட்ட அதே இடத்தில், ஐம்பொன்னாலான புதிய சிலையை நிறுவி, திரிணமூல் காங்கிரஸுக்குத் தக்க பதிலடி கொடுக்கும்.
நான் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றபோது கூட, திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த குண்டர்கள் பெரும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்கத்தின் கூச் பிஹார் பகுதியில் நடைபெற இருந்த பாஜகவின் பிரசாரக் கூட்டத்துக்காக உருவாக்கப்பட்டிருந்த மேடையை திரிணமூல் காங்கிரஸ் கட்சி தங்கள் பிரசாரத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டது. இதுபோல் முன்பு பலமுறை நடைபெற்றுள்ளது. தற்போது இதை நாட்டு மக்கள் அனைவரும் கண்டு வருகின்றனர்.
கணக்குகள் தவறாகிவிட்டன: மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்தும், உத்தரப் பிரதேச மக்களையும் பிகார் மக்களையும் மம்தா பானர்ஜி குறிவைப்பதற்காகவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அவருக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் ஆசையில், பாஜகவின் மீதே அவர் குற்றஞ்சாட்டி வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தில் மகா கூட்டணியின் கணக்குகள் அனைத்தும் தவறாகிவிட்டன. அதனால், என் மீதான விமர்சனங்களை அவர்கள் அதிகப்படுத்தி வருகின்றனர். 
தங்கள் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்களை மறைக்கவே அவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகள் என்னை எந்த அளவுக்கு விமர்சிக்கிறார்களோ, அந்த அளவுக்கு மக்களால் விரும்பப்படுவேன். மகா கூட்டணியின் கபட நாடகம் அனைத்தும் மக்களுக்குத் தெரிந்துவிட்டது.
தொண்டர்களிடையே சண்டை: சந்தர்ப்பவாதம் காரணமாகக் கூட்டணி அமைத்த சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவர்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டு வந்தாலும், அக்கட்சிகளின் தொண்டர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஜாதியை அடிப்படையாகக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று அக்கட்சிகள் நினைத்துவருகின்றன. ஆனால், அது உண்மையில்லை. ஜாதியைக் கொண்டு முன்பு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தபோது, தங்கள் கட்சியைச் சேர்ந்த உறவினர்களை அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆக்கினர். மக்களின் நிலை குறித்து அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை.
பெண்களுக்குப் பாதுகாப்பு: மாநிலத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது, பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். சமாஜவாதி ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. கோசி மக்களவைத் தொகுதியில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரையே சமாஜவாதி கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் ஆதரவுடனே ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், அங்குள்ள அல்வார் பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை தேர்தலுக்காக மாயாவதி மறைத்து வருகிறார். சுயநலத்துக்காக அவர் எதையும் செய்வார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆனால், பாஜக தலைமையிலான அரசு பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளித்துவருகிறது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதை பாஜக அரசு உறுதி  செய்துள்ளது. முத்தலாக் கொடுமையினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கும் பாஜக நிவாரணம் அளித்தது.
பிரதமர் கனவு: மகா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தோல்வி பயத்தில் காணப்படுகின்றன. அவர்கள் நக்ஸல்களை ஒழிப்பது குறித்தோ, நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துவது குறித்தோ, பயங்கரவாதத்தை அழிப்பது குறித்தோ எதுவும் பேசவில்லை. 
30 முதல் 35 தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் கூட பிரதமர் பதவிக்குக் கனவு கண்டு வருகின்றனர். கனவு காண்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், நாட்டு மக்கள் அனைவரும் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடிவு செய்து விட்டனர் என்று பிரதமர் மோடி பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com