தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட விவகாரம்: மனைவிக்கு நவ்ஜோத் சிங் சித்து ஆதரவு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கே காரணம் என்று நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி குற்றம் சுமத்திய நிலையில், எனது மனைவி பொய் கூற மாட்டார் என்று சித்து தெரிவித்துள்ளார்.


மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கே காரணம் என்று நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி குற்றம் சுமத்திய நிலையில், எனது மனைவி பொய் கூற மாட்டார் என்று சித்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு முதல்வர் அமரீந்தர் சிங்கும், கட்சியின் பொதுச் செயலாளரும், பஞ்சாப் தேர்தல் பொறுப்பாளருமான ஆஷா குமாரியும்தான் காரணம் என்று பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளர் சித்து செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து நவ்ஜோத் சிங் சித்துவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எனது மனைவி எப்போதும் நேர்மைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பவர். அதற்காக போராடும் வலிமை அவரிடம் உள்ளது. எனது மனைவி ஒருபோதும் பொய்யுரைக்க மாட்டார் என்றார்.
சித்து இவ்வாறு தெரிவித்தது, தனது மனைவி கூறிய குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே அமரீந்தர் சிங்குக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அனைவருக்கும் தலைவர்; மற்றவர்கள் அல்ல என்றுஅமரீந்தர் சிங்கை மறைமுகமாக குறிப்பிட்டு சித்து விமர்சித்திருந்தார். அதையடுத்து பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவுக்கு சென்ற சித்து, அந்நாட்டு ராணுவ தளபதியைச் சந்தித்து கட்டியணைத்தது சர்ச்சைக்குள்ளாகியது. இந்த விவகாரத்தில் அமரீந்தர் சிங் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இவ்வாறு ஒருவரையொருவர் பெயர் குறிப்பிடாது விமர்சித்து வந்த நிலையில், தற்போது பொது வெளியில் அமரீந்தர் சிங் மீதான குற்றச்சாட்டுக்கு சித்து ஆதரவு அளித்துள்ளது அவர்களுக்கிடையேயுள்ள விரிசலை தெளிவுபடுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com