நாட்டு மக்கள் அனைவரும் மக்கள் என் பக்கம் உள்ளனர்: மோடி

உலகிலேயே மிகச் சிறந்த ஜனநாயகத்தை கொண்டுள்ளது நமது நாடு. மிகவும் நேர்மறையான சூழ்நிலையில், வெகு சிறப்பானதாக இந்த மக்களவைத் தேர்தல்
நாட்டு மக்கள் அனைவரும் மக்கள் என் பக்கம் உள்ளனர்: மோடி


புது தில்லி:  "நாட்டு மக்கள் அனைவரும் என் பக்கம் உள்ளனர். எனவே மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதி. அதிலும் பாஜக முழுப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெறும்' என்று பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். பிரதமரான பிறகு மோடி, இப்போதுதான் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா செய்தியாளர்களைச் சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணி ஆட்சியின் சாதனைகளை விளக்குவதற்காக இந்த செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அனைவருக்கும் வியப்பளிக்கும் வகையில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். இதையடுத்து, அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்.

கேள்விகள் தவிர்ப்பு: அப்போது, "இது பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு. பாஜகவின் கொள்கைப்படி ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் அனைவருமே கட்சியின் ஒழுக்கமான வீரர்கள். இந்த இடத்தில் கட்சித் தலைவர்தான் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். கட்சியில் அவர்தான் எங்களுக்கு முதன்மையானவர்' என்று கூறி கேள்விகளுக்கு பதிலளிப்பதை மோடி தவிர்த்துவிட்டார்.

மீண்டும் பாஜக ஆட்சி: எனினும், மக்களவைத் தேர்தல் குறித்த சில விஷயங்களை செய்தியாளர்களிடம் மோடி பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து நேரடியாக உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். உலகிலேயே மிகச் சிறந்த ஜனநாயகத்தை கொண்டுள்ளது நமது நாடு. மிகவும் நேர்மறையான சூழ்நிலையில், வெகு சிறப்பானதாக இந்த மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் எனது பக்கம் உள்ளனர். எனவே, பாஜக தலைமையிலான அரசு மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சி அமைக்கப் போவது உறுதியாகிவிட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சிறந்த சூழல் நாட்டில் உருவாகியுள்ளது. எங்கள் கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.

வளர்ச்சிப் பாதையில்...: அடுத்து ஆட்சி அமைக்க வேண்டியது யார் என்பதை மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர். நாட்டை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான அனைத்து திட்டங்களையும் எங்கள் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளோம். பாஜக தலைமையிலான புதிய அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அவற்றை செயல்படுத்துவோம். சர்வதேச அளவில் வழி நடத்தும் திறமை இந்தியாவுக்கு உள்ளது. எனவே, நமது நாட்டில் வலுவானதொரு அரசு அமைவது மிகவும் முக்கியம். கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் ஆட்சியில் செய்த சாதனைகள் பெருமிதம் அளிக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட், பள்ளித் தேர்வுகள், ரம்ஜான் பண்டிகை என பல்வேறு நிகழ்வுகளுக்கு மத்தியிலும் மக்களவைத் தேர்தல் மிகவும் அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற்றுள்ளது.

மக்களுக்கு நன்றி: தேர்தல் பிரசாரத்தின்போது, உங்கள் ஆசிர்வாதத்துக்காக நன்றி தெரிவிக்கவே இங்கு வந்துள்ளேன் என்று மக்களிடம் தெரிவித்தேன். அப்போது, இந்த நாடு எங்கள் பக்கம் இருக்கிறது என்பதை தெளிவாகப் பார்க்க முடிந்தது. இப்போதும்கூட, கூட எங்கள் ஆட்சி மீதும், கட்சி மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள நாட்டு மக்களுக்கு நான் மீண்டும் நன்றி தெரித்துக் கொள்கிறேன் என்றார் மோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com