மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு அமல்: அவசர சட்டத்துக்கு மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தியர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டத்துக்கு அந்த


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தியர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டத்துக்கு அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதமாக இருக்கும் மராத்தியர்களுக்கு, அரசு வேலைவாய்ப்புகள், கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அந்த சமூகத்தினர் கடந்த ஆண்டு தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். 

அதையடுத்து கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நடப்பு கல்வியாண்டுக்கான சேர்க்கையின்போது, மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்குமாறு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்துக்கு மகாராஷ்டிர அரசு கடிதம் அனுப்பியது.

அதன்படி, முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில் சுமார் 250 மாணவர்கள் சேர்ந்தனர். 

இந்நிலையில், இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின்போது, "நிகழாண்டு மருத்துவ முதுகலைப் பட்டப்படிப்பில் சேருவதற்கு மராத்தா சமூக மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க முடியாது' என்று மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் உச்சநீதிமன்றமும், மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்தது. 

இதனால், முதுகலைப் பட்டப்படிப்பில் மராத்தா இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களின் நிலை கேள்விக்குறியான நிலையில், அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மகாராஷ்டிர அரசு இந்த அவசர சட்டத்தை இயற்றியுள்ளது.

இதுதொடர்பாக அந்த மாநில வருவாய் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் வெள்ளிக்கிழமை கூறுகையில், "மராத்தா இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு இந்த அவசர சட்டம் ஆறுதலாக இருக்கும். இந்த சட்டத்துக்கு அமைச்சரவை இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. அதையடுத்து சட்டத்தை அமல்படுத்துவதற்காக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பவுள்ளோம்.  இந்த அவசர சட்டத்தால் பாதிக்கப்படும் பொதுப்பிரிவு மாணவர்களின் கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பட்டப்படிப்பில் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த அவசர சட்டத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டால், அதில் தீர்ப்பு வழங்குவதற்கு முன் அரசு தரப்பு வாதத்தை கோருமாறு மும்பை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யவுள்ளோம்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com